மதுரையில் உள்ள பாண்டி கோவில் அருகே துவாராக பேலஸில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். முதலில் தனது உரையை ஆரம்பித்த போது, மேடையில் அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்க சொன்ன அழகிரி, நீங்கள் இறங்கவில்லை என்றால் நான் வெளியில் சென்று விடுவேன் என கூறினார்.
பின்னர் உரையை ஆரம்பித்த அழகிரி கூறியதாவது , திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்றுநோக்கியது. திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை; கலைஞர் வலியுறுத்தலால் தேர்தல் பணி செய்தோம். திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்கிறார்கள், அப்படியொரு பார்முலா கிடையாது, கருணாநிதிதான் பார்முலா, அவரின் உழைப்புதான் வெற்றி காரணம் என மு.க.அழகிரி கூறினார்.
திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன், ஒருபோதும் பதவியை விரும்பியதில்லை. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கலைஞர் வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன். பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு?
ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது என கூறிய அழகிரி, ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள். என்ன போஸ்டர் அடித்தாலும் முதல்வராக ஸ்டாலினால் வர முடியாது என அதிரடியாகக் கூறினார்!