பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் மோடி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியவை தொடர்பாக, மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் பேசியது தொடர்பான ‘வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் கவர்னரான சத்யபால் மாலிக், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துகளை சமீபத்தில்கூறியிருந்தார்.இந்நிலையில் ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது தொடர்பான வீடியோவை, காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளதாவது:
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் கடும் விவாதமாகி விட்டது. அவர் மிகவும் ஆக்ரோஷமாக, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். போராட்டத்தில் 500 பேர் உயிரிழந்ததாக கூறினேன். எனக்காகவா அவர்கள் இறந்தனர் என மோடி குறிப்பிட்டார்.
ஒரு நாய் இறந்தால் கூட இரங்கல் செய்தி அனுப்புகிறார். ஆனால் விவசாயிகள் பலியானது குறித்து அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.பின், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்கச் சொன்னார். அதன்படி அமித் ஷாவை சந்தித்து நடந்தவற்றை கூறினேன்.
‘அவர் குழப்பத்தில் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இனி என்னிடம் பேசுங்கள்’ என அமித் ஷா கூறினார்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.’அரசியல் சாசன பதவியில் உள்ள ஒருவர், மற்றொருவர் குறித்து இவ்வளவு தரக்குறைவாக பேசியுள்ளார்; இதுதான் தற்போது நம் நாட்டில் ஜனநாயகத்தின் நிலை’ என மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து சத்யபால் மாலிக் அளித்துள்ள விளக்கம்:விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்கச் சென்றேன். ஆனால் அதை கேட்பதற்கு அப்போது அவர் தயாராக இல்லை. அதனால் அமித்ஷாவை சந்திக்கும்படி கூறினார்.பிரதமர் மோடி மீது அமித் ஷா மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ‘பிரதமருக்கு சிலர் தவறான தகவல்களை கூறியுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து ஒரு நாள் பிரதமர் புரிந்து கொள்வார்’ என, அமித் ஷா கூறினார். மற்றபடி பிரதமர் குறித்து தவறாக அவர் ஏதும் குறிப்பிடவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















