கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிகளில், ‘என் மண்;- என் மக்கள்’ எனும் நடைபயணத்தை, குனியமுத்துாரில் கும்ப மரியாதையை ஏற்று துவக்கினார், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை. பாலக்காடு சாலை இடையர்பாளையம் பிரிவு, இடையர்பாளையம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை, குறிச்சி காந்திஜி ரோடு மைதானம் வழியே, சாரதா மில் சாலையை அடைந்து, சங்கம் வீதியில் முடிவடைந்த பயணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சங்கம் வீதியில் நடந்த கூட்டத்தில், இவர் பேசியதாவது:
நடைபயணம், 64, 65வது தொகுதிகளாக இங்கு நடந்துள்ளது. அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருப்பதை காண முடிகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் வாயிலாக, 1,455 கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிச்சிகுளம் இத்திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம், பண்பாட்டை காப்பவராக உள்ளார். திருக்குறளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க பாடுபடுகிறார்.
சிறு, குறு தொழில்முனைவோர், 430 சதவீத நிலைக்கட்டண உயர்வு, பீக் ஹவர்ஸ் கட்டணத்தில், 15 சதவீத உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; தொழில் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க, அரசு முன்வர வேண்டும்.
ஊழலில் திளைத்த அரசாக, தி.மு.க., உள்ளது. பிரதமரை நோக்கி ஊழல் குற்றச்சாட்டு கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 2019-ல் ராகுல் குற்றம் சாட்டியதால், எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாதவாறு, படுதோல்வியை காங்., கண்டது. அதுபோல், தற்போது ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், நாட்டு நடப்பு குறித்து தெரியாமல் உள்ளார். அது தெரிந்த ஒருவரை, அவருக்கு நியமிக்க வேண்டும். 2026 தேர்தலில், தி.மு.க., அடியோடு காணாமல் போகும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன், நம்மை ஏளனமாக, பிற நாட்டினர் பார்த்தனர். தற்போது பிற நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை வியந்து பார்க்கின்றனர். தொழில்முனைவோருக்கு முத்ரா, எம்.எஸ்.எம்.இ., வாயிலாக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினர்.