75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மூவர்ணக் கொடி உடனான பிணைப்பை மேம்படுத்தும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தேசிய கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு 20 கோடி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை பறக்கவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மூவர்ண கொடி முதல் முறையாக 1947-ம் ஆண்டு இதே நாளில் ஏற்றுக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியபோது சுதந்திர இந்தியாவிற்கான கொடியை கனவு கண்ட அனைவரின் தைரியத்தையும், முயற்சியையும் நினைவுகூறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றி அவர்களின் கனவு தேசத்தை கட்டியெழுப்ப நாம் உறுதியேற்போம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.