மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில் இந்தியா கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர், இந்த சாதனையை 2020 உலகப் புலிகள் தினத்தன்று நமது நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி, நாளை (ஜூலை 28-ந் தேதி) புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்கான இணைப்பு https://youtu.be/526Dn0T9P3E ஆகும். நாடுமுழுவதுமிருந்து சுமார் 500 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
உலகப் புலிகள் எண்ணிக்கையில், தற்போது இந்தியாவில் சுமார் 70 சதவீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் புதிய இணையதளம் ஒன்றை துவக்கி வைத்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையகத்தின் பரப்புரை பத்திரிகை ஒன்றையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்வை கீழ்காணும் இணைப்பில் காணலாம் – https://youtu.be/526Dn0T9P3E.