100 ஆண்டுகால கனவை இன்று நினைவாக்கியுள்ளார் பிரதமர் மோடி. இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மெட்ரோ ரயில் சேவையின் புதிய வழித்தடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். , 4.8 கிலோமீட்டர் நீள எஸ்பிளானடே – ஹவுரா, 1.2 கிலோமீட்டர் நீள டரடலா – மஜேர்ஹத், 5.4 கிலோமீட்டர் நீள நீயூ கரியா – ரூபியா ஆகியவை ஆகும். இதில் மிகவும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது எஸ்பிளானடே – ஹவுரா இடையிலான வழித்தடம். இது ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில்மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும்.
இதற்காக 520 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் வழியே மெட்ரோ ரயில்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பின்னணியை ஆராய்ந்தால் 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேய பொறியாளர் ஒருவர், இதன் சாத்தியக் கூறுகள் பற்றி பேசியிருக்கிறார். அவருடைய பெயர் சர் ஹார்லி டெய்ரிம்ப்ளே-ஹே. 1921ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பாயும் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் ரயிலை இயக்குவது சாத்தியம் என்று கூறியுள்ளார். அப்போது இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதெல்லாம் வெறும் கனவாக தான் போகும் என்று ஏளனம் செய்தனர். அந்த 100 ஆண்டுகள் கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.
இந்தியா முழுவதும் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதற்காக விரிவான முன்முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது, மாணவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.