2024 ல் வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.ஆளும் கட்சியான பாஜகவும் எதிர்கட்சிகளும் கூட்டணி குறித்தும் தொகுதிகள் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இதனால் தற்போதே நாடாளுமன்ற தேர்தல் களமானது சூடுபிடித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற குறித்து டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் எனவும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவர் எனவும் டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
மேலும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் கொடியேற்றி , நாடு அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் சாதனைக்கான பட்டியலை, உங்கள் முன் பட்டியலிடுவேன் என்றார். பிரதமர் மோடியின் உரை உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது.
நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.க தனது தேர்தல் வேலைகளை செய்ய துவங்கியுள்ளது.
பா.ஜக.வை எப்படியாவது வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன.இந்த நிலையில் தான் அடுத்து யார் பிரதமராக வருவார் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என ஆங்கில டி.வி. செய்தி சேனலான டைம்ஸ்நவ், இ.டி.ஜி., கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 லிருந்து 326 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகள் இணைந்து எதிர்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு 160 முதல் 190 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி செல்வாக்கு மிக்க பிரதமராக வருவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பொறுப்பேற்று நேருவின் சாதனையை மோடி சமன் செய்வார் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கட்சிகள் எப்படி ?
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங். கட்சி 24 முதல் 25 எம்.பி. தொகுதிகளிலும், தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகராவின் பாரத் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 9 முதல் 11 எம்.பி. தொகுதிகளிலும், ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள கட்சி 12 முதல் 14 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.