பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றை நிறைவு செய்தர். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த அக்டோபர் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்றார். அடுத்ததாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கிளாஸ்கோ நகரில் நடக்கும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, மேற்காசிய வல்லமை பொருந்திய நாடான இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னெட் நேற்று சந்தித்தார். சந்திப்பின் போது இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட், பிரதமர் மோடியை எங்கள் கட்சியில் இணையுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பென்னெட் கூறுகையில், ”இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலம் ஹீரோ அதனால், எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்,” என, சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதை கேட்டு, பிரதமர் மோடியும் சிரித்தார். பின் இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர். இஸ்ரேல் பிரதமர் பென்னெட் கூறுகையில், ”இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு ஆழமானது; இதை மேலும் மேம்படுத்த, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன்,” என்றார்.இஸ்ரேல் பிரதமர் பென்னெட்டின் கட்சியின் பெயர், யாமினா நியூ ரைட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் அனைவரும் சூரியனின் குழந்தைகள். ‘ஒரு உலகம், ஒரே சூரியன், ஒரே மின்சக்தி’ என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். சூரிய மின் சக்தி மாசற்றது; துாய்மையானது. சூரிய மின்சக்தி உற்பத்தியை உலக நாடுகள் அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.