குருப்பெயர்ச்சி 2024 : விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியிலும் வந்து சேரும்! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

விருச்சிகம்
விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்; தோ, ந, நா, நி, நூ, து, தூ, தே, தோ, ய, யா, யி, யு … ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்ராசியின் அதிபதி: செவ்வாய். நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதிகள்: குரு, செவ்வாய். பாதகாதிபதி: சந்திரன். மாரகாதிபதி: சனி, புதன்.

வெற்றிதரும் விருச்சிகம் ராசி
ஆற்றல் காரகன், பராக்கிரம காரகன், தைரிய காரகன், வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த, கேள்வி ஞானமும், அறிவாற்றலும், சாதுரியமும் கொண்டவரான விருச்சிக ராசி நண்பர்களே!உங்கள் ராசிநாதன் செவ்வாய், மேஷத்தில் நெருப்பாகவும், உங்கள் ராசியில் நீராகவும் ஐவகை பூத தத்துவத்தில் காண்கிறோம். நெருப்பு பற்ற ஆரம்பித்தால் எல்லா இடத்திலும் பரவும். தண்ணீர் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கீழ்நோக்கியே பாய்ந்து செல்லும்.

உலகில் புகழ்பெறுவதற்கான பல வாய்ப்புகள் உங்களுக்குண்டு. உங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்தவற்றை சிந்தித்துக் கொண்டே எதிர்காலத்திற்குரிய வழியை திட்டமிடுகின்ற ஆற்றல் பெற்றவர்கள் நீங்கள். உங்களுக்குள் ஒரு தீர்க்க தரிசனம், ஞானம் இருக்கும். எனவே, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியும், உங்கள் உடன் இருப்பவர்களை பாதுகாக்கும் சக்தியும் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.

நாளை என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தி உங்களுக்குண்டு என்பதால் நாளைய வாழ்க்கைக்காக இன்றே வழியமைத்துக் கொள்வீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் எப்போதும் சிறப்பானதாகவே இருக்கும். பெருமைப்படக்கூடிய ஜாதகராக நீங்கள் இருப்பீர்கள் என்பதால் நீங்கள் செய்யும் செயல்களை, வாழும் வாழ்க்கையை எப்போதும் மற்றவர்கள் போற்றுவார்களே ஒழியே நீங்கள் தவறே செய்தாலும் அதற்காக உங்களைத் தூற்றாமல் நீங்கள் அப்படி செய்கிறீர்கள் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று உலகம் உங்களை ஆதரிக்கும்.

ஜோதிட சாஸ்திரத்திலும் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதை சரியாகவே கணிப்பீர்கள். தீர்க்கதரிசன ரீதியில் சிந்தித்து சொல்வீர்கள். அது சரியாகவே அமைந்துவிடும். எந்தவொரு செயலில் நீங்கள் இறங்கினாலும் அதில் முழு கவனமாக இருப்பீர்கள். மற்றவர்கள் பேச்சையும் செயலையும் கவனிக்கவே மாட்டீர்கள். கருமமே கண்ணாக இருக்கும் நீங்கள் இளமையிலேயே உலக அனுபவத்தைப் பெற்று விடுவீர்கள். சமநீதி, சம்மதர்மம் என்பதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

உங்களில் பலருக்கு இளவயதில் சோதனைகளே வாழ்க்கையாக இருக்கும். பலருக்கு தாயன்பு என்பது கேள்விக்குறிதான் என்றாலும், உங்கள் சகிப்புத்தன்மையால் முன்னேற்றத்தை நோக்கி செயல்படுவீர்கள். மனவுறுதி மிக்கவரான நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதை நீங்களாகவே மாற்றிக்கொள்ள நினைத்தாலும் முடியாமல் போய்விடும். உங்களுடைய மனதைப் பணத்தாலும் பொருளாலும் மாற்ற முடியாது. ஞான மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். பகுத்தறிவுவாதிபோல் பலப்பல பேசினாலும் உள்ளுக்குள் கடவுள் நம்பிக்கை அதிகரித்து உங்கள் வார்த்தைகள் காலப்போக்கில் வரமாகி மக்கள் வாழ்க்கைக்கு வளமாகும். வழிகாட்டியாக மாறும். உங்களில் பலர் கடவுள் விதியைத் தவிர மற்ற எதையும் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.

எல்லோரிடமும் நீங்கள் சகஜமாகப் பழகிவிட மாட்டீர்கள். பழகியவரிடம் கூட உங்கள் அந்தரங்க விஷயங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் குறிக்கோளையும், உங்களுக்குரியதையும் மற்றவருக்கு விட்டுக் கொடுக்கவும் மாட்டீர்கள். உங்கள் சாமர்த்தியத்தையும் அறிவையும் கல்வியையும் சமயத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் வல்லவராக நீங்கள் இருப்பீர்கள்.

உங்களைப் பற்றி புறம் கூறுபவர்களையும், உங்களுக்குக் கேடு விளைவிப்பவர்களையும் வஞ்சம் தீர்க்காமல் விடமாட்டீர்கள். சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து எதிரியை அழிக்கும் திறன் பெற்ற உங்களுக்கு பழிவாங்கும் உணர்ச்சி பிறவிக்குணம் என்றே சொல்ல வேண்டும். உங்களுக்கு கோபம் வருவது தெரியாது. வந்துவிட்டால் உங்களுக்கே தலைகால் தெரியாது. நீறு பூத்த நெருப்பென்றே உங்களைச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் ஏற்படும் செல்வாக்கினால் உலகத்தின் போக்கையே மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவராக நீங்கள் விருத்தியடைவீர்கள்.

பொதுவாகவே உங்களைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவார்கள். உங்கள் ராசியான தேளுக்கு கொடுக்கில் விஷம் என்றால் உங்களுக்கு நாக்கில் விஷம் என்று சொல்ல வேண்டும். எப்படிப்பட்டவரையும் உங்கள் வார்த்தைகளால் அச்சமடைய வைத்து விடுவீர்கள். பொதுநல சேவையில், அரசியல் ஈடுபாடு கொள்வதுடன் தான, தர்மம் செய்வதிலும் சிறந்து விளங்குவீர்கள். எப்போதும் தனது ஜாதி, தனது கட்சி, தனது மதம் என்று பேசுவதற்கு உங்களிடம் நிறைய விஷயம் இருக்கும். எத்தகைய தோல்வி, இழப்பு, பிரச்சினைகளையும் கண்டு நீங்கள் பயப்பட மாட்டீர்கள். அதேபோல் எத்தனைப் பெரிய நபராக இருந்தாலும், முன்பின் அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் எளிதாக அவருடன் பேசி நட்பு கொள்ளக்கூடியவர் நீங்கள். பெற்றோரின் ஆதரவில், பொறுப்பிலிருந்து, இளைய வயதிலிருந்தே விலகி, உங்களை நீங்களே வளர்த்துக் கொண்டு முன்னேற்றம் காண்பவர்கள் நீங்கள்.

பூர்வீக சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்கும் யோகம் உங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தாலும், ஒரு காலகட்டத்திற்குப்பின் அது உங்களை விட்டுப் போய்விடும். வசீகரம், கவர்ச்சி, மனோதிடம், நெஞ்சுரம் உங்களின் பிறவி சொத்தாகும். எப்பாடு பட்டாகிலும் உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் உங்களுக்கு நீங்கள் நினைத்தபடியே யாவும் நடந்தேறும்.

உங்களுக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானாதிபதியாக குருபகவான் விளங்குவதால், நீங்கள் வாக்கு பலிதம் மிக்கவர்களாகவும் விளங்குவீர்கள். செல்வாக்குப் பெற்றவர்களின் வரிசையில் முதலிடம் பெற்றவர்கள் உங்கள் ராசியினர்தான். மூளை பலம்தான் உங்களின் மூல பலமாகும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், மற்றவர்களுக்கு உதவி புரிவதிலும் முன்நிற்பீர்கள். வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்தவேண்டும் என்பது உங்களின் கொள்கையாக இருக்கும். என்றாலும், சுற்றி இருப்பவர்களின் தவறான வழிகாட்டுதல் சில நேரங்களில் உங்களைத் தடுமாற வைக்கும். வீண் சிக்கலில் கொண்டு போய்விடும். உங்கள் ராசியாதிபதி செவ்வாய் உங்களுக்கு ஆட்சியாக இருப்பதால் தைரியம் உங்களுக்குத் துணையாக இருக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

உங்கள் ராசியில் பிறந்த ஒருவருக்கு புதன் நட்பாக இருப்பாரேயனால் அவர் லாபம் கொடுக்கும் இடத்தில் அமருவாரேயானால், ராஜ கிரகமான சூரியன் உங்களுக்கு நட்பாக அமைந்து விட்டால் கல்வித்துறையில், அரசு ஊதியம் பெறக்கூடிய நிலையை வழங்குவார். இத்தகைய கிரக அமைப்பு எல்லா விருச்சிக ராசியினருக்கும் அமைந்துவிடாது. அதேபோல், சுக்கிரன் தனித்திருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டிருந்தால் கற்புநெறி தவறாமல் வாழக்கூடிய நிலையை அடைவீர்கள். ஆனால், சுக்கிரன் செவ்வாய் வீட்டில் இருந்தாலோ, பாவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலோ உங்களின் நிலை மாறுபடும்.

உங்கள் மனம் நேர்மையை நாடும் என்றாலும், வாழ்க்கைப் போக்கில், உலக வாழ்க்கையின் நிலையறிந்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள். சுதந்திரமாக இருப்பதையும், செயல்படுவதையும் விரும்புகின்ற நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று விரும்பக் கூடியவராக இருப்பீர்கள்.

இவையாவும் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்குரிய பொதுப் பலன்களாகும். நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும், ராசி நாதனான செவ்வாய் நிலை வேறுபட்டிருக்கும், உங்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும், லக்னங்களில் மாற்றம் இருக்கும், தசா புத்தியில் வித்தியாசங்கள் இருக்கும், ஒருவருக்கு அமைந்திருப்பது போல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப் போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்கள் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.

சாதனைகள் புரிய வைக்கும் சப்தம குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான விருச்சிக ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடான மேஷத்தில் சஞ்சரித்த குருபகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.

கடந்த ஒரு வருடமாக ஆறாம் வீட்டில் இருந்து, உங்கள் உடல் நலனில் பாதிப்பு, மனதில் சோர்வு, குழப்பம், நிம்மதி இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்படுதல், அதனால் மருத்துவச் செலவு, செய்து வருகின்ற தொழிலில் சோதனை, வருமானத்தில் தடைகள், பகைவர்களால் தொல்லை, அத்தியாவசிய செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை, வரவுக்கு மீறிய செலவுகளால் அவதி, எதிலும் நாட்டம் இல்லாத நிலை, எங்கும் போட்டி எதிலும் போட்டி என்று பகைவர்களின் தொல்லை, உடன் இருந்தவர்களும் துரோகிகளான நிலை, கணவன் மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிம்மதியற்ற நிலையில் வாழ்ந்து வந்திருப்பீர்கள். உதவியென்று போன இடமெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை என்பதாகவே இருந்திருக்கும். புதிய நண்பர்களும் உங்களை வைத்துப் பயன்பெறும் நோக்கத்துடன் வந்தவர்களாகவே இருந்திருப்பார்கள்.

இவற்றின் காரணமாக நீச்சல் தெரியாதவன் கடலில் விழுந்து தத்தளிப்பது போல் தத்தளித்து வந்த நீங்கள் கடைசியில் இறைவனை சரணடைந்திருப்பீர்கள். கோவில் கோவிலாகச் சென்று உங்கள் குறைகளைச் சொல்லி வணங்கி நன்மையைக் காண முயன்றிருப்பீர்கள். ஒரு சிலருக்கு குறுக்குவழியில் செல்லும் நிலையும் உண்டாகி இருக்கும். அதிலும் சங்கடங்களையே சந்தித்திருப்பீர்கள். பொதுவாக குரு பகவான் ஆறில் சஞ்சரித்த கடந்த ஓராண்டு காலமும் உங்கள் வாழ்வில் சோதனையான காலம் என்றே சொல்ல வேண்டும்.

சரி; ஆறாம் வீட்டில் குரு சஞ்சரித்த கடந்த ஆண்டு முழுவதும் எங்கள் வாழ்க்கை சோதனையாகவே இருந்தது. ஏழாம் வீட்டில் குரு சஞ்சரிக்கப் போகும் இக்காலமாவது எங்களுக்கு நன்மையாக இருக்குமா? எங்கள் நிலையில் மாற்றம் வருமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.பொதுவாக 2, 5, 7, 9, 11 ம் வீடுகளில் குருபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் பார்க்கும் இடங்களுக்கு மட்டுமல்லாமல் நின்ற இடத்திற்கும் சேர்த்தே சுபப் பலன்களை வழங்குவார்.

ஏழாம் இடம் குரு பகவானின் யோக சஞ்சாரத்திற்குரிய இடமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 7 ம் வீட்டில் சஞ்சரிப்பவர், அங்கிருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதனால் உங்கள் வாழ்க்கையில் இனி நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் தகுதியும் செல்வாக்கும் உயரும். பொன் பொருள்களுக்கும் அதிபதியான குரு பகவான் பூமிக்காரகனின் மீது தன் பார்வையை செலுத்தும்போது விற்காமல் இருந்த இடங்கள் விற்பனையாகும், விளையாமல் இருந்த நிலத்தில் விளைச்சல் உண்டாகும், வாங்க நினைத்த இடங்களையும் வாங்க முடியும். ஜாதகரின் ஜென்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்ற போது, ஜாதகர் நல்ல நெறிமுறைகளில் பற்றுதல் கொண்டு, நேர்மையாக நடந்து புனிதமாவார். இல்லற வாழ்க்கையில் இன்பம் காண்பார். எல்லையற்ற விருப்பத்துடன் இருப்பார். உயர் தகுதியும், மதிப்பு மிக்கவர்களாலும் ஆதாயம் அடைவார். வாகன யோகம் பெற்று, சந்தோஷமான மனைவியைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வார் என்று புலிப்பாணியாரின் வாக்கே ஏழாம் இட குருவின் பெருமையை உணர்த்தும்.

நேற்று வரை இருந்த சங்கடமான நிலை என்பது இனி இருக்காது. தொழிலில் இருந்த முடக்கமும், வேலையில் இருந்த தடைகளும் இனி அகல ஆரம்பிக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு ஏற்படும். சுய தொழில் செய்வோருக்கு முன்னேற்றம் உண்டாகும். நேற்றுவரை பதுங்கிய புலிபோல் வாழ்ந்து வந்த நீங்கள் இனி பாயும் புலிபோல் மாற்றம் பெறுவீர்கள். உங்கள் பெருமையை ஊரே போற்றும். பணம் பல வழியிலும் வந்து சேரும்.

இக்காலத்தில் குருபலம் உங்களுக்கு உண்டாவதால் திருமணம் நடக்காமல் இருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, வாகனம், சொத்து வசதிகள் அவரவர் ஜாதகத்தின் யோகத்தைப் பொருத்து அதிகரிக்கும். உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும்.ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான், உங்களுக்கு ஏற்றமான பலன்களையே வழங்க உள்ள நேரத்தில், அங்கிருந்து 5, 7, 9 ம் பார்வைகளில் உங்கள் ராசியையும், மூன்றாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்த்திட இருக்கிறார் என்பதால் அந்த இடங்கள் எல்லாம் இக்காலத்தில் சிறப்படையப் போகின்றன் ஆம்; குரு பகவான் பார்க்கும் இடங்கள் மூன்றினாலும் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகப் போகின்றன.

முதலில் தனது ஏழாம் பார்வையை உங்கள் ராசியின் மீது செலுத்தும் குருபகவான், உங்களை ராஜநடை போடவைப்பார். நேற்றுவரை உங்களை சர்வ சாதாரணமாக எண்ணியவர்கள் எல்லாம் உங்கள் திறமைகளையும் பெருமைகளையும் உணர்வார்கள். தடைகளாக இருந்தவற்றையெல்லாம் தாண்டி வெற்றி நடைப் போடுவீர்கள். உடலில் புதிய வலிமை குடிகொள்ளும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயது வந்தும் திருமணம் நடக்காமல் தாமதப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். பெண்களால் ஆண்களுக்கும், ஆண்களால் பெண்களுக்கும் சந்தோஷமும் நன்மையும் உண்டாகும். விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம்கூட காதல், திருமணம் என்ற நிலைக்கு கொண்டு செல்லும்.

அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான சகோதர, வீரிய, தைரிய ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், உங்கள் துணிச்சலை அதிகரிப்பார். நீங்கள் முன்னெடுக்கும் செயல்களில் வெற்றிகளை உண்டாக்குவார். உங்கள் தொழிலில் இருந்த தடைகளை நீக்கி முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். யோகத்துடன் போகமும் உங்களை மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மைகள் உண்டாகும்.

அடுத்து, தனது ஐந்தாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 11 ம் இடமான லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருபகவான், உங்களிடம் சுறுசுறுப்பை உண்டாக்குவார். உங்கள் சிந்தனைத் திறனை அதிகரிப்பார். எந்த வழி நல்ல வழி என்று தெரிந்து அந்த வழியில் செல்ல வைப்பார். சொத்துகளில் இருந்த வில்லங்கம், வழக்குகள் போன்றவற்றை முடித்து வைப்பார். துணையுடன் வாழ்பவர்களுக்கு மனதில் சபலத்தை உண்டாக்கும் வகையில் புதிய நட்பு உண்டாகும் என்பதால், எதிர்பாலினரிடம் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் பழகுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முடியும். இக்காலத்தில் பணம் பல வழிகளிலும் வரும் அதனால் குடும்பம், தொழில் செழிப்பாகும். புதிய உற்சாகம் உண்டாகும். இவை யாவும் குரு பகவானின் ஸ்தான பலத்தாலும், பார்வைகளின் பலன்களாலும் நீங்கள் காணப்போகும் நற்பலன்களாகும்.

பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் 1.5.2024 அன்று சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில், 3.5.2024 முதல் 2.6. 2024 வரை அவர் அஸ்தஙகம் அடைகிறார் பொதுவாக சுப கிரகமான குரு பகவான் அஸ்தங்கம் அடைகின்ற போது ஜாதகருக்கு அவரால் எந்த விதமான பலன்களையும் வழங்க முடியாமல் போகும் என்பதுடன் நம் சிந்தனையில் குழப்பம், செயலில் தடுமாற்றம் என்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டாகும். எனவே இக்காலத்தில் கவனமுடன் செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும். சுய ஜாதகத்தில் யோகமான திசா புத்தி நடந்து வந்தால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். செயல்கள் லாபம்தரும்.

வக்ர காலம் என்ன செய்யும்?
குருபகவானின் சஞ்சார நிலையில், அஸ்தமனமும் வக்கிர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றம் உண்டாகும். அந்த வகையில் 15.10.2024 முதல் 11.2.2025 வரை சப்தமஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கி வரும் சாதகமான பலன்களில் மாற்றம் ஏற்படும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் அவருடைய பார்வைகளால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு அதற்குரிய தகவல் வரும். வீட்டில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, கிரகப்பிரவேசம் செய்வது என்று செலவுகள் தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

நான்காமிட சனியின் பாதகம் குறையும்
நான்காம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது உடல் நலனில் சங்கடங்கள் ஏற்படும். முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் தடைகள் தோன்றும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடலில் சோர்வு உண்டாகும் என்பது பொதுவான விதி. இக்காலத்தில் சனி பகவானின் பத்தாம் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாகி இருப்பதால் சனி பகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் இனி விலக ஆரம்பிக்கும். உங்கள் உடலில் இருந்த நலிவுகள் நீங்கும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். ஓடாத இயந்திரங்கள் இனி ஓட ஆரம்பிக்கும். முயற்சிகள் லாபமாகும்.

ராகு – கேது சஞ்சாரப் பலன்கள்
குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதற்கு முன்பிருந்தே ராகு உங்கள் ராசிக்கு 5 ம் வீட்டில் சஞ்சரித்து வருகிறார். 5 ம் வீட்டில் சஞ்சரித்து வருவதால் தெய்வ அருளிலிலும் தடை, சோதனையும் வேதனையுமாக வாழ்க்கை. பிள்ளைகளை நினைத்து நினைத்து உடல்நிலையில் பாதிப்பு, அவர்களின் எதிர்காலம் பற்றி அதிகமாக யோசிப்பீர்கள். அவர்களுடைய வாழ்க்கை மீது இப்போது உங்களுக்கு அதிகமாக பயம் உண்டாகும். தொழில், உத்தியோகம், எதிர்காலம் போன்ற எந்த ஒன்றிலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். இதுவா அதுவா? இப்படியா அப்படியா? என்று மதில் மேல் பூனைபோல் கிடந்து உங்கள் மனம் தள்ளாடும். இந்த நிலையில் கேது 11 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், தொழில் வியாபாரம் போன்றவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். மனம் பக்தி மார்க்கத்தில் செல்லும். கோயில், குளம், தெய்வ வழிபாடு என்று மனம் சந்தோஷமடையும். கேது பகவான் ஞான மோட்சக்காரன் என்பதால் 11 ம் வீட்டில் அவர் சஞ்சரிக்கும் போது வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை உங்களுக்கு காட்டுவார். புதிய நட்பின் மூலம் வாழ்க்கையை உங்களுக்கு விளக்குவார். நீங்கள் காணாதவற்றை காணும் நிலையை ஏற்படுத்துவார். இக்காலத்தில் வழக்கமான செயல்களிலும், ஆதாயத்திலும் எந்தவிதமான குறையும் இருக்காது. வருமானத்திற்கும் தடை இருக்காது. ராகுவால் பிள்ளைகளால் சங்கடம் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை என்றிருந்தாலும் 11 ம் இட கேதுவால் உங்கள் நிலை உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
வாழ்க்கை என்பது பிறப்பு முதல் இறப்பு வரை தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதில் நன்மைகளும் உண்டாகும், சங்கடங்களும் ஏற்படும். பூர்வ புண்ணிய விதிகளின்படி, கர்ம வினைகளுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். என்றாலும், ஏதாகிலும் ஒரு கிரகம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் வாழும் வரையில், வாழ்வதற்காக வழங்கிக் கொண்டிருக்கும். அந்த நிலையில், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது அந்த ஜாதகருக்கு யோகமான பலன்களை வழங்குவார். மற்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய சங்கடங்களையும் கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். அந்த வகையில் விருச்சிக ராசியினரான உங்களுக்கு, சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை ஆகிய நான்கு மாதங்களிலும் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்கள் நிலையில் உயர்வை உண்டாக்குவார். உடல், மனதில் இருந்த சோர்வினை நீக்குவார். முயற்சிகளை வெற்றியடைய வைப்பார். எதிர்பார்த்த ஆதாயங்களை உண்டாக்குவார். எதிர்ப்புகளால் உண்டான பாதிப்புகளை மாற்றுவார். வம்பு வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். உடல் நிலையில் ஆரோக்கியத்தை அதிகரிப்பார். தொழிலில் ஆதாயத்தை உண்டாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். வருமானத்தில் இருந்த தடைகளை நீக்கி வைத்து எதிர்பார்த்த வருமானத்தை அடையும் நிலையை உங்களுக்கு உண்டாக்குவார். சங்கடங்கள் என்பதே இல்லாத நிலை இந்த நான்கு மாதங்களிலும் உங்களுக்கிருக்கும்.

பொதுப்பலன்
சுப கிரகமான குரு பகவானின் பார்வை உங்களுக்கு உண்டாகின்ற காரணத்தினால் இக்காலத்தில் உங்கள் விருப்பங்கள் யாவும் எளிதாக நிறைவேறும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்தேறும். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் கடன்களை அடைப்பீர்கள் புதிய வீடு வாங்குதல், இடம் வாங்குதல் என்று உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி உங்கள் கைக்கு வரும். அனைத்திலும் லாபநிலை உண்டாகும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்காலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை இக்காலத்தில் உண்டாக்கிக் கொள்வீர்கள். குடும்ப உறவுகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

பரிகாரம்
அலைக்கடலோரத்தில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை ஒருமுறை நேரில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர உங்கள் சங்கடங்கள் விலகும். நன்மைகள் அதிகரிக்கும்.

திருக்கோவிலூர் பரணிதரன்-9444393717

Exit mobile version