சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி, அவரின் 2வது சொந்த ஊரான சென்னை மண்ணில் அறிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்கள் மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் தோனிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எம்.எஸ்.தோனி, கேப்டன் கூல், தல, எம்எஸ்டி, மாஹி என ரசிகர்களால் வெவ்வேறு பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீண்ட முடி ,அதிரடி பேட்டிங், ஹெலிகாப்டர் ஷாட் , மிகவும் விரைவாக ஓடி ரன்கள் எடுப்பது என தோனிக்கு நிறைய அடையாளங்கள் இருந்ததால் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் அவருடைய சாதனைகள் என்றும் வரலாற்றில் இடம் பிடித்து இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான உலகக் கோப்பைகளை தங்கள் அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டன் எம் எஸ் டோனி மட்டும் தான். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இவர் இடத்தை பூர்த்தி செய்வதற்கு இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.
2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பயின் டிராபி என ஐசிசி-யின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் எம் எஸ் தோனி.
எம் எஸ் தோனி 84 ஒரு நாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்து உள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் ஷான் பொல்லாக் 72 போட்டிகளில் ஆட்டமிழக்கமால் இருந்தார். தோனி விளையாடிய 51 ஒருநாள் போட்டிகளில் இலக்கை நோக்கி விளையாடிய போது 47 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவிலும், 2 போட்டிகள் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. எம் எஸ் தோனி அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்து உள்ளார்.
எம்.எஸ்.தோனி கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு உள்ளார். அவர் கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கிரீஸில் அச்சத்துடன் இருப்பார்கள். 350 சர்வதேச போட்டிகளில் 123 ஸ்டெம்பிங் செய்துள்ளார் தோனி, இவருக்கு அடுத்துப்படியாக தென்னாப்பிரிக்காவின் பௌச்சர், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் உள்ளார்கள்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் “இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த சாதனை மகத்தானது தோனி. நாம் இருவரும் இணைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் வெற்றி பயணம் தொடர்ந்தது. 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது. இதுமட்டுமில்லாமல் 2008, 2012, 2013, 2015, 2019 ஆகிய ஐந்து ஐபிஎல் தொடர்களில் இறுதி போட்டியில் தோல்வியடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த அணைத்து தொடர்களிலும் அரையிறுதிக்கு நுழைந்த ஒரே அணி எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே மட்டும் தான்.
டிஆர் எஸ் (டெசிஷன் ரிவியூ சிஸ்டம் ) களத்தில் இருக்கும் நடுவர்கள் அவுட் கொடுத்தாலும் , வீரர்களின் டிஆர்எஸ் மூலம், களத்தில் இருக்கும் நடுவர் மூன்றாவது நடுவரை ஆலோசித்து முடிவை மாற்றலாம் . முதல் முறையாக கிரிக்கெட்டில் 2009 இல் பயன்படுத்தப்பட்டது . எம் எஸ் தோனி டி ஆர் எஸ் மதிப்பாய்வில் 95% வெற்றி பெற்றுள்ளார். நடுவரின் தீர்ப்புக்கு எதிராக டிஆர்எஸ் எடுப்பதிலும் ராஜாவாக திகழ்ந்துள்ளார்.
எம் எஸ் தோனி கடைசியாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பிறகு, இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல்2020 தொடர் தள்ளிப்போகியுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் 2020 13வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயுள்ளது. அவர் ஓய்வில் இருந்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடரில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.