மரணத்தை மறைத்துவிட்டீர்களே ! தமிழக ஊடகங்களும், திராவிட ஸ்டாக்குகளும் என்றுதான் உண்மை பேசுவார்களோ? DR.கிருஷ்ணசாமி காட்டம்..

பாப்பாப்பட்டி பரப்புரையில் மறைக்கப்பட்ட வெற்றிமாறன் மரணம்!திராவிட நீதியா? திராவிட மனுவா?வாக்காளர்களை ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் விலைப் பேசும் போக்குகள், தமிழக இடைத்தேர்தலில் துவங்கி நாடாளுமன்றத் தேர்தல்களில் மெல்ல பரவி, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதலபாதாளம் வரையிலும் பாய்ந்தன. சட்டமன்றத் தேர்தல்களே அந்த கதி என்றால், உள்ளாட்சித் தேர்தல்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஜனநாயகத்தைப் பரவலாக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, இராஜீவ்காந்தி அவர்களால் பஞ்சாயத்துராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயகம் வேர்க்கால்கள் வரையிலும் பரவ வேண்டும் என்பதற்கு மாறாக, பணநாயகமும், ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுமே வேர்க்கால்கள் வரையிலும் பாய்கின்றன.

1996-ஆம் அண்டு தமிழகத்தில் பஞ்சாயத்துராஜ் சட்டம் அமலுக்கு வந்தபொழுது, மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சிக்கு, எவரும் வேட்புமனு கூட தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், போட்டியிட்டு வெற்றிபெற்ற சில நாட்களில், அவரும் அவரது ஆதரவாளர்கள் 6 பேரும் கொல்லப்பட்டார்கள். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி, விருதுநகர் மாவட்டம் நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் எவரும் மனுத்தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை.

10 ஆண்டுகள் தேர்தல் நடைபெறாமல் இருந்து, 2009-ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் கிராம அமைப்புகளைக் கொண்ட இந்திய சமூகத்திற்கு பஞ்சாயத்துராஜ் முறையாக அமல்படுத்தப்பட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்; கிராமங்கள் தலைநிமிரும். ஒரு காலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவதும், ஒன்றியப் பெருந்தலைவர் ஆவதும் கெளரவத்திற்கான பதவிகளாகவேக் கருதப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அவை அரசியல் ஆதிக்க சக்திகளின் அதிகார மையங்களாகிவிட்டன.எந்தக் கட்சி தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறுகிறதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது அந்தக் கட்சிக்கு அனுசரணையாக அல்லது அந்தக் கட்சியாக மாறக்கூடியவர்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியதோடு, ஊராட்சிகள் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், இருப்பிடமாகவும் மாறிவிட்டதால், முதலில் ஐநூறும் ஆயிரமும் கொடுத்து வாக்குகளை விலைபேசிய நிலைகள் மாறி, கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளை ஏலத்திற்கு விடுவதும், பல நேரங்களில் ”ஊர் முடிவு” என்றப் பெயரில் ஒட்டுமொத்த கிராம மக்களுடைய உரிமைகளையும் அப்படியே கபளீகரம் செய்யும் அவலநிலை பரவிவிட்டது.

ஆசை வார்த்தை காட்டுதல், அச்சுறுத்துதல், இரண்டுக்கும் பணியவில்லையென்றால் அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியிட விடாமலேயே தடுப்பது, எங்கெல்லாம் போட்டியாளர்கள் வருவார்கள் என்று கருதுகிறார்களோ, அங்கெல்லாம் தகுதியுள்ள வேட்புமனுக்களை நிராகரிப்பது போன்ற செயல்களும் பரந்துபட்டு நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஒன்றியக் கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க, 7 முதல் 10 இலட்சங்கள் வரையிலும் கட்சிப் பணங்களே வீடுவீடாக விளையாடுகின்றன. இதையும் தாண்டி, வேறு கட்சிக்காரர்கள் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகின்றன.

இந்து விரோத திமுகவின் உலக மகாபித்தலாட்டம் அம்பலம்  DMK ANTI HINDU DRAMA

பாப்பாப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்தநிலையில், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்திய பிறகு, அங்கு தேர்தல் நடைபெற்றது. அந்தப் பாப்பாப்பட்டியில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாப்பாபட்டியில் தேர்தல் நடைபெற்ற நிகழ்வைக் குறிப்பிடும் வகையில் அங்கு முதல்வர் ஸ்டாலின் பரப்புரை நடத்திக் கொண்டிருந்தார். அதே நேரத்தில், தென்காசி மாவட்டம், ஜமீன்தேவர்குளத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் மற்றும் அவரது துணைவியாருடைய வேட்புமனுக்கள் திட்டமிட்டே தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி, தனக்கு நீதி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பாக தீக்குளித்த வெற்றிமாறன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலில், தானோ தனது துணைவியாரோ போட்டியிடுவதைக் கூடத் தடுத்துவிட்டார்களே, இதற்குக் கூட உரிமையில்லையா? ஜனநாயகமில்லையா? என்று அரசின் கவனத்தை ஈர்க்க, தீக்குளிக்க முயற்சித்த அவர் இப்பொழுது மரணமடைந்துள்ளார்.

நீட்டுக்கும், ரோகிங்யோவிற்கும், பங்களாதேசிகளுக்கும் பாசம் காட்டுபவர்கள், வெற்றிமாறன் மரணத்தின் மீது சிறிதுகூட அக்கறை இல்லாமல் மெளனம் காத்துவருவது தான் சமூகநீதியா? இதைக் கண்டிப்பதற்குக் கூட கூட்டணிப் பாசம் தடையாக இருக்குமா? இதுபற்றி எவரும் கேட்பாரில்லையே! மணிக்கணக்கில் விவாதம் செய்யும் ஊதுகுழல் ஊடகவியலாளர்கள், நீட்டுக்கு நாட்கணக்கில், மாதக்கணக்கில் நீட்டியவர்கள் எங்கே போனார்கள்? பாப்பாப்பட்டியில் கிராமசபைக் கூட்டத்தை நடத்தி ஆவேச உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்களைக் கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

‘தென்னைமரத்திலே தேள் கொட்டினால் பனைமரத்திலே நெறிகட்டும்’ என்பதற்கிணங்க செயல்படும் பரப்புரைவாதிகளும், வாய்ச்சவடால் வீரர்களும் எங்கே போனார்கள்? தமிழகத்தில் இன்னும் நடந்தேறும் ஜனநாயக விரோதச் செயல்களை மூடிமறைப்பதற்காக, எத்தனை நாட்களுக்கு, எத்தனை மாதங்களுக்கு திராவிட முலாம் பூசி ஏமாற்றுவார்கள்? தேசிய சிந்தனை வளராமல், மனிதநேயம் தளைக்காமல், அற உணர்வு மிளிராமல் வெறும் திராவிடம் பேசி திரிவதால் எதுவுமே சாதிக்க முடியாது என்பதை வெற்றிமாறன் மரணம் எடுத்துக் காட்டுகிறது அல்லவா?முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் உச்சகட்ட முறைகேட்டில் நடந்து முடிந்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகம், அபரிமிதமான பணப்புழக்கம் ஆகியன குறித்து நாம் எவ்வளவு எடுத்துரைத்தாலும் நீதிதேவதைகளும் கண்களைத் திறப்பதில்லை; அவர்களுக்கு இவைகளெல்லாம் அற்பக் காரணங்களாகவேத் தோன்றும். ஒரு காலத்தில் ஊரிலிருந்து விலக்கி வைத்ததும், பின் ஓட்டுப் போடவிடாமல் தடுத்ததும் மனுவாதம் எனில், இப்பொழுது வேட்புமனுத்தாக்கல் செய்யக்கூட அனுமதிக்காததும் திராவிட மனுவின் பிரதிபலிப்புகளே! நல்லாட்சி தொடர உள்ளாட்சிகள் என்ற நிலைகள் மாறி, கொள்ளை ஆட்சிகள் தொடரவே உள்ளாட்சித் தேர்தல்கள் என்ற நிலை உருவாகிவிட்டதே!ஜனநாயகம் வேர்க்கால் வரை பரவ வேண்டும் என்ற நிலை மாறி, வேர்க்கால்களை அழுக வைக்கும் அமைப்பாக உள்ளாட்சித் தேர்தல் முறைகள் மாறிவிட்டன. பாப்பாப்பட்டியில் வெற்றுப் பரப்புரை செய்து என்ன பயன்? ஜனநாயகம் மறுக்கப்பட்ட வெற்றிமாறன் மரணத்தை மறைத்துவிட்டீர்களே! தமிழக ஊடகங்களும், திராவிட ஸ்டாக்குகளும் என்றுதான் உண்மை பேசுவார்களோ?வெற்றிமாறன் மனுவை தள்ளுபடி செய்து,அவரை மரணத்திற்குத் தள்ளியது!திராவிட நீதியல்ல; திராவிட மனுவே!! இப்படிக்கு,டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,

Exit mobile version