தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கட்சியான திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. எதிர்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. ஆனால், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கணிசமான வெற்றியை பதிவு செய்தது.
ஒட்டும்மொத்தமாக வெளியாகியுள்ள முடிவுகளின்படி, திமுக 10758 இடங்களில் போட்டியிட்டு 7581 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 11538 இடங்களில் போட்டியிட்டு 1996 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி 1370 இடங்களில் போட்டியிட்டு 586 இடங்களிலும், பா.ஜ.க 5594 இடங்களில் போட்டியிட்டு 305 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதேபோல், நாம் தமிழர் கட்சி 3986 இடங்களில் போட்டியிட்டுள்ளது. அதில் அக்கட்சி 6 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. 3924 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதாவது 62 இடங்களில் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளில் 42.99 விழுக்காடு வாக்குகளை பெற்று திமுக முதல் இடத்தை பிடித்துள்ளது. 25.47 விழுக்காடு வாக்குகளை பெற்று அதிமுக 2வது இடத்தையும், 4.92 விழுக்காடு வாக்குகளை பெற்று பா.ஜ.க 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடாமல் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் 13.01 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் 3.35%, பா.ம.க – 1.54%, அமமுக 1.40%, நாம் தமிழர் 1.35 % வாக்குகளை பெற்றுள்ளன.