இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக “தேசிய கல்வி கொள்கை 2020” குறித்த காணொளி கருத்தரங்கம் மதுரை பெட்கிராட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசிய பெட்கிராட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு எம்.சுப்புராம், ”பல்வேறு கலந்தாய்வுகளுக்கு பிறகு, 36 ஆண்டுகளுக்கு பின் புதிய கல்விக்கொள்கையை அரசு அறிவித்துள்ளது. இக்கல்விக்கொள்கையை முழு அளவில் அமல்படுத்தும் பொழுது நமது மாணவச்செல்வங்கள் உலக அரங்கிலே பிரகாசிப்பார்கள்” என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு காமராஜ், கடந்த ஆறு ஆண்டுகளாக நமது பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற பொழுது இந்தியர்கள் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். இந்தியா பல்வேறுதுறைகளிலே தலைமைத்துவம் பெற்று வரும் இந்த நேரத்தில் கொரோனா பரவல் என்பது ஒரு சிறு தடங்கலாக அமைந்துள்ளது. இருப்பினும் நம்முடைய வளர்ச்சி முன் எப்ப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் கடந்த 29ம் தேதி மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை 2020ஐ அறிவித்து உள்ளது. இதனால் இந்தியா உலக அளவில் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கக்கூடிய நிலை உருவாகும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் அவசியத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் . கல்வியின் தரத்தை உயர்த்தல், அனைவருக்கும் கல்வி அளித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நம் சந்ததியினரை உலக அளவில் மேம்படுத்துவதற்கான, செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருப்பதால் இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை அவசியம் என காமராஜ் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மதுரை கல்லூரியின் பொருளாதாரத் துறை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் எஸ்.தீனதயாளன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார். 130 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் நாளிதழ் வாசிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 40 கோடிதான் என்றும் செய்தித்தாள்களை படிப்பது என்பது எல்லோராலும் இயலாத காரியமாக உள்ளது எனவும் இச்சூழலில் இதுபோன்ற மெய்நிகர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து மக்களுக்கு செய்திகளை கொண்டுபோய் சேர்க்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகத்திற்கு பாராட்டுகளை தீனதயாளன் தெரிவித்தார். ஒரு நாடு வளரவேண்டும் என்றறால் அந்நாடு கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும், கல்வி ஒன்றுதான் நாட்டினுடைய அழியாத செல்வம். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்துவிடும். ஒரு நாடு சமூக ரீதியிலே, பொருளாதார ரீதியிலே, கலாச்சார ரீதியிலே அறிவியல் ரீதியிலே வளரவேண்டுமென்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது கல்விதான். வள்ளுவர் ” கற்க கசடறக் கற்பவை கற்றபின் / நிற்க அதற்குத் தக” என்கிறார். நமக்கு என்ன பிரச்னை என்றால், படிக்க முடிகிறது ஆனால் அதற்கு தகுந்தபடி வாழமுடியவில்லை. இதற்கு விடையளிக்கும் விதமாக இருப்பதுதான் தற்போதைய கல்விக்கொள்கை எனக் குறிப்பிட்டார். இக்கொள்கையில், பள்ளிக்கல்வி 5 +3 +3 என்றும் உயர்கல்வி 4 ஆண்டுகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய முறையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என முதல் வகுப்பு தொடங்கி பனிரெண்டாம் வகுப்புவரை 36 தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் புதிய கொள்கையில் 3, 5, 8 , 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே தேர்வுகள் நடக்கும் என்றும் இடைப்பட்ட தேர்வுகள் மதிப்பீடு செய்பவையாக மட்டுமே இருக்கும். இதனால் மாணவர்களுக்கான மன அழுத்தம் குறையும் என தீனதயாளன் தெரிவித்தார்.
ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படும் என்றும் எட்டாம் வகுப்புவரை தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட தீனதயாளன் இந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் 7 முதல் 7 ½ கோடி பேர்கள்தான் தமிழ் படிக்கிறார்கள் என்றும் 130 கோடி மக்களும் தமிழ் படிக்க இதில் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் இதனால் இக்கல்விக்கொள்கை வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் எனவும் கூறினார்.
எம்.பில் படிப்பு இனி கிடையாது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை தேர்வு செய்து படிக்க வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வியோடு தொழில் கல்வி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பை தருபவர்களாக உருவாவார்கள் என்று தெரிவித்த தீனதயாளன் பங்குபெற்றோர் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.
மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்ததோடு, வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். பெட்கிராட் நிறுவனத்தை சேர்ந்த திருமதி கிருஷ்ணவேணி நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், சுயவேலைவாய்ப்பு பயிற்சி மாணவர்கள், ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















