தமிழகத்தில் புதிதாக போடப்படும் சாலைகளின் நிலை மிகவும் தரமற்றதாக உள்ளது. கையில் பிடுங்கி எடுக்கும் அளவுக்கு தார்சாலை போடப்படுகின்றது. அதை தட்டி கேட்கும் பொதுமக்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள் என்ற செய்திகள் தினம்தோறும் வர ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் கோவைப்புதுார் – புட்டுவிக்கி மாநகராட்சி சார்பில் போடப்பட்ட புது தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு, செங்கல் லோடு லாரியின் சக்கரங்கள் புதைந்து, ஒருபுறமாக சரிந்தது மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தும் கூட, கோவை மாநகராட்சியில் தரமின்றி ரோடு போடுவது, இதன் வாயிலாக, நேற்று வெட்ட வெளிச்சமானது. முதல்வரின் உத்தரவுக்கு இவ்வளவுதான் மதிப்பா என, கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
கோவை மாநகராட்சி முழுவதும் ரோடுகள் தோண்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தோண்டப்பட்ட குழிகளை சரியாக மூடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏதாவது ஒரு இடத்தில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுகின்றனர்; இன்னொருபுறம் பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டுகின்றனர்; மற்றொருபுறம் காஸ் குழாய் பதிக்க தோண்டுகிறார்கள்.
இவ்வாறு தோண்டப்படும் குழிகளை, சரியாக மூடுவதில்லை. இறுகும் வகையில், குழி முழுவதும் மணல் கொட்டி, சமன் செய்வதில்லை. ‘வெட் மிக்ஸ்’ மட்டும் பரப்பி, அப்போதைக்கு மேடு பள்ளங்களை சமப்படுத்துகின்றனர்.
சில நாட்கள் கழித்து, தார் சாலை போடுகின்றனர். அப்போதும், பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், லேசாக ‘மில்லிங்’ செய்து விட்டு, தோசை பதத்துக்கு தார் ரோடு போடுகின்றனர்.
இதுதொடர்பாக, எச்சரிக்கை விடுத்திருந்த முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் கோவை வந்திருந்தபோது, நகர் பகுதியில் ரோடு போடும் பணியை, நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பிறகும் கூட, மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர். நகரின் பல்வேறு இடங்களிலும், தரமின்றி ரோடு போடப்படுகின்றன.
சமீபத்தில், கோவைப்புதுாரில் இருந்து புட்டுவிக்கி வழியாக வரும் உக்கடம் பைபாஸில், பில்லுார் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டது. அக்குழியை சரிவர மூடாமல், ‘பேட்ச் ஒர்க்’ செய்திருக்கின்றனர். எப்போதும்போல் இவ்வழித்தடத்தில், வாகனங்கள் இயக்கப்பட்டன; எந்த பிரச்னையும் எழவில்லை.
குழாய் பதித்து, ஒன்றரை மாதங்கள் கடந்து விட்டதால், ரோட்டின் தன்மையை உறுதி செய்யாமல், மாநகராட்சியில் இருந்து, சமீபத்தில் புதிதாக தார் ரோடு போடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, ரோட்டில் வழிந்தோடிய தண்ணீர், நிலத்துக்குள் இறங்கி, மண் லேசாகி இருந்திருக்கிறது.
புதைந்தது லாரி
அவ்வழியாக, நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், செங்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி, பிளேக் மாரியம்மன் கோவில் அருகே, குழாய் பதித்த இடத்தில் சென்றபோது, பாரம் தாங்காமல், லாரியின் முன்புற, பின்புற சக்கரங்கள் ரோட்டில் புதைந்தன.
லாரி ஒருபுறமாக சரிந்தது. லாரியில் இருந்த செங்கற்கள் அகற்றப்பட்டு, பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ‘அலேக்’காக துாக்கப்பட்டது.
லோடுடன் லாரி புதைந்ததால், சுண்டக்காமுத்துார் தொட்டிக்கு செல்லக்கூடிய, சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் கசிந்தது.
உடனடியாக, அக்குழாயை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.