வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை – வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை; அதேவேளையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது.

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய 11 சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் பலன் ஏதும் இல்லை.

விவசாய சட்டங்களில் செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார், ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை. அவர்கள் ஆலோசனைகளை வழங்க தயாராக இல்லை என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. ஆலோசனை வந்தவுடன் அதை பரிசீலிப்போம். எனவும் கூறியது அரசு.

அதேவேளையில், இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அந்தச் சட்டங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காண குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய வேளாண்மை துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தனது சுட்டுரை பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலியில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளாா். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதைத் தவிர, அந்தச் சட்டங்களின் பிரிவு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த உழவா் சங்கத்தினா் நள்ளிரவில் வந்தாலும் அவா்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக அவா் கூறியுள்ளாா்.

Exit mobile version