10 ஆண்டுகளில் எனக்காக வீடு கட்டவில்லை;டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், திரளாகக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய மோடி,தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.2025-ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “இன்று, இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் உலகளாவிய அடையாளமாக நிற்கிறது” என்று பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டில் நாட்டின் நற்பெயர் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 2025-ம் ஆண்டிற்கான தொலைநோக்குத் திட்டத்தை சுட்டிக் காட்டிய மோடி, இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறுவதற்கும், இளைஞர்களுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும்தொழில்முனைவோருக்கான அதிகாரத்தையும் அளிப்பதற்கும், புதிய வேளாண் சாதனைகளைப் படைப்பதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்க்கையை எளிதாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, மக்களை வாழ்த்திய பிரதமர், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ஏழைகளுக்கான வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான திட்டங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு வகையில் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள அந்த மக்களையும், குறிப்பாக பெண்களையும் அவர் வாழ்த்தினார். குடிசை வீடுகளுக்குப் பதிலாக உறுதியான வீடுகள், வாடகை வீடுகளுக்கு பதிலாக சொந்த வீடுகள் உண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அர்த்தப்படுத்துகின்றன என்று அவர் மேலும் கூறினார். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் சுயமரியாதை, புதிய விருப்பங்கள் மற்றும் கனவுகள் நிறைந்த இல்லத்தின் அடையாளமாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அவர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க தாம் வந்திருப்பதாக அவர் கூறினார். கடந்த காலத்தில் நெருக்கடி நிலையின் இருண்ட நாட்களை நினைவுகூர்ந்த மோடி, தாமும் தம்மைப் போன்ற பல கட்சித் தொண்டர்களும் அவசர நிலைக்கு எதிரான தலைமறைவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அசோக் விஹாரில் தங்கியிருந்ததாகக் கூறினார்.

“இன்று ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது” என்று மோடி கூறினார். வளர்ந்த இந்தியாவில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உறுதியான வீடு இருப்பதை உறுதி செய்வதற்கான தீர்மானத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தில்லிக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். எனவே, குடிசைகளுக்கு பதிலாக உறுதியான வீடுகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குடிசைவாசிகளுக்காக கல்காஜி விரிவாக்கப் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். எந்த நம்பிக்கையும் இல்லாமல் பல தலைமுறைகளாக குடிசைகளில் வாழ்ந்த குடும்பங்கள் முதல் முறையாக உறுதியான வீடுகளுக்கு குடிபெயர்ந்தன என்று அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் தான் என்று தாம் அப்போது கூறியிருந்ததை அவர் இப்போது நினைவு கூர்ந்தார். இன்று சுமார் 1,500 வீடுகளின் சாவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதாக திரு மோடி குறிப்பிட்டார். “ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களின் சுயமரியாதையை மேலும் உயர்த்தும்,” என்று அவர் கூறினார். இன்றைய தினம் பயனாளிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, அவர்களிடையே புதிய உற்சாகமும், சக்தியும் இருந்ததை தாம் உணர்ந்ததாக பிரதமர் கூறினார். வீட்டின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை.இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது கூரை இல்லாமல் வசிக்கும் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுமாறு அவர் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏழை மக்களின் சுயமரியாதையை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், இதுவே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான சக்தி என்றும் மோடி கூறினார். தில்லியில் சுமார் 3000 புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். வரும் ஆண்டில் நகரவாசிகளுக்கு ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இந்தப் பகுதிகளில் ஏராளமான அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர், அவர்கள் வசித்து வந்த வீடுகள் மிகவும் பழமையானவை. புதிய, நவீன வீடுகளின் கட்டுமானம் அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை வழங்கும், இது அவர்களின் நல்வாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். நகரில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கலின் வெளிச்சத்தில், நரேலா துணை நகரத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் தில்லியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மத்திய அரசு மேலும் துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் அறிவித்தார்.

Exit mobile version