இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி…. அடுத்த வாரம் வருகிறது மத்திய அரசின் பாரத் அரசி…. கிலோ ரூ.29 .

bharat rice

bharat rice

அரிசி விலை உயர்வை தடுக்க, கையிருப்பில் உள்ள இருப்பு விபரத்தை, வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டும்’ என, அரிசி வியாபாரிகள் மற்றும் அரவை ஆலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

போதிய மழை இல்லாததால், பல மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால், அரிசி விலை உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு, 2023 ஜூலையில் தடை விதித்தது. உடன், அரிசி விலை கிலோவுக்கு, 5 ரூபாய் வரை குறைந்தது.

இந்த நிலையில் இந்த முறை நெல் விளைச்சல் இருந்தும் அரசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அரிசி தட்டுப்பாடு அதனால் விலை உயர்வு என பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மேலும் அரிசி பாதுகாக்கி வைப்பதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெரிய வியாபாரிகள், அரிசி ஆலைகள், அரிசி மற்றும் நெல் கையிருப்பு விபரத்தை தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, புழுங்கல் அரிசி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி, பாசுமதி அரிசி, நெல் ஆகியவற்றின் இருப்பு விபரங்களை, விற்பனையாளர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, மத்திய அரசின் பொது வினியோக துறையின் இணையதளத்தில், கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.

இந்த விபரத்தை, அரிசி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு, தமிழக உணவு துறைக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி விற்கவுள்ளது. பாரத் அரிசியானது வருகிற 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு வகையான அரிசிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. விலைகள் குறையும் வரை முக்கிய பொருட்களின் ஏற்றுமதி மீதான தடைகள் மற்றும் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் கோதுமை, அரிசி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடைகள் இன்னும் அமலில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த சஞ்சீவ் சோப்ரா, “அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை ஒரு கிலோ ரூ.29க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.” என்றார்.

அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வாரமும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரிசி விலை கடந்த ஒரு வருடத்தில் சில்லறை சந்தைகளில் 14.5 சதவீதமும், மொத்த சந்தைகளில் 15.5 சதவீதமும் உயர்ந்துள்ளதால், விலையை கட்டுப்படுத்த இதுபோன்ற புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

பாரத் அரசியை முதற்கட்டமாக சில்லறை சந்தைகளில் விற்பனை செய்ய 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் இது கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே பாரத் கோதுமையை கிலோ ரூ.27.50க்கும், பாரத் பருப்பு
( கொண்டைக்கடலை) கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version