அரசியலில் யாரும் புனிதர் அல்ல எனவும், புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேசியதாவது: ஒரு ஆண்டில், 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக, எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். நான் அப்படி சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால், அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும். உங்களுடைய கட்சி பிரச்னையை தீர்த்து விட்டு, எங்களிடம் வந்து பேசுங்கள். முடிந்தால் வழக்குப் போட்டு, எங்களை உள்ளே தள்ளுங்கள் என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டுள்ளனர்.
அதை எல்லாம் கடந்து தான் அமைச்சராகி உள்ளேன். நேரு புனிதர் அல்ல, என்று திருவெறும்பூரில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசி உள்ளனர். புனிதராக இருந்தால், வாயில் வெண்ணெய் தடவி படுக்கப் போட்டு இருப்பீர்கள். புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்? இவ்வாறு அவர் பேசினார்.