ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஏற்கெனவே கவர்னர் ஒப்புதல் தராததால் அவருக்கு எதிராக நேற்று கண்டன தீர்மானத்தை திமுக அரசு சட்டசபையில் கொண்டு வந்தது. இதன் பிறகு சட்டத்தில் கவர்னர் கையெழுத்து இட்ட தகவல் வெளியாகியது.
கண்டன தீர்மானத்திற்கு பயந்துதான் கவர்னர் சட்டத்தில் கையெழுத்து இட்டதாகவும் இது தங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் திமுகவினர் கூறி வருகின்றனர்.ஆனால் உண்மையில் இந்த சட்டத்திற்கு ஏப்., 07ம் தேதியே அதாவது கண்டனம் நிறைவேற்ற படுவதற்கு முன்பே கவர்னர் கையெழுத்து இட்டதாக உறுதிபடுத்தப்படாத கவர்னர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரத்தில் கூறப்படுவதாகவது: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் கவர்னர் கையெழுத்து இட்டு விட்டதாக நேற்று (ஏப்., 10) மதியமே தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அதற்குரிய கோப்புகளையும் வந்து வாங்கி செல்லுமாறு கூறிவிட்டோம். ஏப்., 07ம் தேதியே கவர்னர் கையெழுத்து இட்டுவிட்டாலும் சனி, ஞாயிறு பிரதமர் வருகையால் கவர்னர் பிசியாக இருந்தார். எனவே இது குறித்த தகவல் திங்கட்கிழமை மதியம் 2.30க்கு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தற்செயலாக நடந்த விஷயம்.சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதாலும், அவசரம் இல்லாத விஷயம் என்பதாலும் திங்கட்கிழமை தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தகவல் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு தரப்பில் இதுகுறித்து கூறும்போது: சட்டத்தில் கவர்னர் கையெழுத்து இட்ட தகவல் திங்கட் கிழமை மதியம் தான் எங்களுக்கு கிடைத்தது. உடனே ஒரு ஊழியரை அனுப்பி கவர்னர் மாளிகையில் இருந்து கோப்புகளை பெற்றுக் கொண்டோம் என்றனர்.