பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மற்றும் முதியவர்கள் சிலர் காணாமல் போவதாகவும், அவர்களை தன்னார்வலர்கள் தூக்கிச் சென்று ஒரு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவ்வூர் மக்களுக்கு தகவல் பரவியது.

இந்நிலையில், கெம்பனூர் வனப்பகுதி அடிவாரத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கிறிஸ்துவ விடுதியில், 15-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மொட்டையடித்து அடைக்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள், தோட்ட வேலைக்காக சென்றவர்கள், கோவில் முன்பு அமர்ந்திருந்தவர்கள், நாளிதழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் என ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இந்த விடுதியில் அடக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அடைக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தும் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதும் தெரியவந்தது..

சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் வட்டாட்சியர், அடக்கப்பட்டவர்களிடம் விவரம் கேட்டு அவர்களை மீட்டு காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தார். இச்செய்தி அறிந்த இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தன்னார்வலர்களின் வாகனத்தையும் கவிழ்த்தனர். மேலும் விடுதியை முற்றுகையிட்டனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அடைக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் அழைத்துச் சென்று காவல்துறையினர் சேர்த்து வருகின்றனர். ஆதரவற்றவர்களை அரசு காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்கள் 10 பேரை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் கோயமுத்தூர் மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏன் ஆதரவற்றவர்களை, அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு தனியார் கிறிஸ்துவ விடுதியில் அடைக்கப்பட வேண்டும்? ஏன் ஆதரவற்றவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலரை கடத்தி வந்து அடைத்து வைக்க வேண்டும்? அப்படி கடத்தி வந்தவர்களை மொட்டையடித்து ஏன் துன்புறுத்த வேண்டும்?

என்ற பல கேள்விகளை கோயம்புத்தூர் வாசிகள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தெளிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source :-News 18 Tamil

Exit mobile version