உத்திர பிரேதேசத்தில் பிறந்து மும்பை நகரில் வறுமையில் வாழ்ந்து இன்று உலகமே உற்றுநோக்கும் இளைஞர் தான் இளம் கிரிக்கெட் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் பானிபூரி விற்று வந்த அதே மும்பையில், தன்னுடைய கடினமான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று 5 கோடிக்கு வீடு வாங்கி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வளர்ச்சி வாழ்க்கையில் போராடும் பலருக்கும் முன் உதாரணம்.
22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் .இவர் தனது 10 வயதில் தனது பெற்றோருடன் மும்பைக்கு வந்துவிட்டார். மும்பையில் பிரபலமான ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள குடிசை வீட்டில்தான் வசித்து வந்தார். ஆசாத் மைதானத்தில் பிரபல கிரிக்கெட் பிரபலங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வருவது வழக்கம். அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து பார்த்து வளர்ந்த ஜெய்ஸ்வால் தானும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது என்று முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடன் சொந்த ஊருக்குச் செல்லாமல் தனது கனவை நோக்கி ஓடினார் ஜெய்ஸ்வால்
சிறு சிறு கடைகளில் தங்கி வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.பகலில் பானிபூரி விற்பது கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வது, டெண்டில் வசிப்பது என இவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.அவரது கிரிக்கெட் கனவை நிறைவேற்றப் பாடுபட்டார்.அவரின் கனவிற்கு உயிர் கொடுத்து பயிற்சிகளை மேற்கொண்டார்.

அந்த நேரத்தில் ஆசாத் மைதானத்தில் ஜெய்ஸ்வால் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்த சாண்டாகிரசில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வரும் ஜூவாலா சிங் என்பவர் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறனை அறிந்து அவருக்கு பயிற்சி அளித்தார் அதன் மூலம் தனது கடின முயற்சியால் இன்றைக்கு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாடி சாதித்துக்காட்டினார்.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். மூன்று சீசன்களில் விளையாடியுள்ள அவர் 37 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் எட்டு அரைசதங்களுடன் 1172 ரன்கள் குவித்துள்ளார். ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் போட்டியிலேயே 171 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது வரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் என 861 ரன்கள் குவித்துள்ளார். வினோத் காம்ப்ளி, விராட் கோலி ஆகியோருக்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் உலகில் சாதனை நாயகனாக கால்பதித்திருக்கும் ஜெய்ஸ்வால், பொருளாதார ரீதியாகவும் வெற்றி கண்டு வருகிறார். மும்பை பாந்த்ரா பகுதியில் 5.38 கோடி ரூபாய்க்கு நட்சத்திர வீடு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.1,110 சதுர அடி அளவில் இந்த அனைத்து வசதிகளுடனும் இந்த அபார்ட்மெண்ட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முறை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையான சூழல்களைத் திறமையால் வென்றெடுக்க முடியும் என்பதற்கு ஜெய்ஸ்வால் ஒரு உதாரணம்.குடிசையானாலும் சரி பங்களாவில் வாழ்ந்தாலும் சரி திறமையானவன் விடாமுயற்சி செய்தால் வெற்றிகளை குவிக்கலாம்.