அம்பன் சூறாவளிப் புயல் காரணமாக ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விமானம் மூலம் இன்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர்கள் திரு பாபுல் சுப்ரியா, திரு பிரதாப் சந்திரா சாரங்கி, தேவஸ்ரீ சௌத்ரி ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர். ஒடிசா ஆளுநர் திரு கணேஷி லால், முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் ஆகியோரும் சென்றிருந்தனர். சூறாவளிப் புயலால் ஏற்பட்ட சேதங்களை பாட்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் விமானத்தில் இருந்து பிரதமர் பார்வையிட்டார்.
பாதிப்புகளை நேரில் பார்த்தறிந்த பிறகு, புவனேஸ்வரில் மாநில மூத்த அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு சென்று சேதாரத்தை மதிப்பிடும் காலம் வரையில், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.500 கோடி நிதி உதவி அளிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
சிரமமான இந்த நேரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு தோள் கொடுத்து செயல்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டமைப்புகளை சீர் செய்து, புதுப்பிக்கத் தேவையான, சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றார் அவர்.
இறந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், ஒடிசா மக்களுடன் துணை நிற்பதாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















