உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி-20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாகஇந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர்
என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்தியா என வைத்திருந்த டிவிட்டர் முகப்பு படத்தை பாரத் என மாற்றியுள்ளார். பாரதம் என அழைப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜக எம்பி ஹர்னாத் சிங் என்பவர், ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட இந்தியா என்ற பெயரை அழைப்பதில் அவமானமாக உள்ளது. எனவே பாரத் என மாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வானதி சீனிவாசன் பாரத் என பதிவிட்டார். இந்த நிலையில் 20 வது ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா புறப்படுகிறார். இந்த பயண நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல் குறிப்பில் இந்திய பிரதமர் என்பதற்கு பதிலாக ‘பாரத பிரதமரின் இந்தோனேசிய பயண நிகழ்ச்சி’ என குறிப்பிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி20 அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.