பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது.
பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது மத்திய அரசு.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு மூன்று முறை தலா 2,000 ரூபாய் வீதம் ஓவொரு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சேருவதற்காக மத்திய அரசு சில வழிமுறைகளை வைத்திருக்கிறது அதன்படி ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில், கொரோனா காலத்தில், 41 லட்சம் பேருக்கு, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திட்டத்திற்கான இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பயனாளிகள் பட்டியலில் இருந்து, போலியாக சேர்க்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், உதவித் தொகையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த தனியார் இ – சேவை மைய நிர்வாகிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து ‘தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே, உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்கான ஆவணங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டது.
வேளாண்துறை நடத்திய ஆய்வில், உதவித்தொகை பெறுவதற்கு தமிழகத்தில், 24.6 லட்சம் பேர் தகுதியுள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டது.
அவர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று, இணையதளத்தில் முறையாக வேளாண்துறையினர் பதிவு செய்யவில்லை.
இதனால், 20.09 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே, ஜூலை மாதம், 14வது உதவித்தொகை கிடைத்துள்ளது. மீதமுள்ள , 4.51 லட்சம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 15வது தவணை உதவித்தொகையை விடுவிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்த உதவித் தொகையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.