பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு (22.01.2025) பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். வரலாற்று ரீதியில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, இந்த இயக்கத்தை அடிமட்ட அளவில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று நாம் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (#BetiBachaoBetiPadhao) இயக்கத்தின் 10 ஆம் ஆண்டில் இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில், இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, மக்கள் பங்கேற்பு முயற்சியாக மாறியுள்ளதுடன் அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பையும் பெற்றுள்ளது.”
“பாலினப் பாகுபாடுகளை நீக்குவதில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் முக்கிய கருவியாக உள்ளது. அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு கல்வியை வழங்கி அவர்கள் தங்களது கனவுகளை அடைவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான சூழலை இது உருவாக்கியுள்ளது.”
“மக்களின் முயற்சிகளுக்கும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது. வரலாற்று ரீதியாக குறைந்த குழந்தைப் பாலின விகிதங்களைக் கொண்ட மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளன. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து ஆழமான உணர்வைத் தூண்டியுள்ளன.”
“இந்த இயக்கத்தை அடிமட்ட அளவில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் நான் பாராட்டுகிறேன். நமது மகள்களின் உரிமைகளை நாம் தொடர்ந்து காப்போம். அவர்களின் கல்வியை உறுதி செய்வோம். எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவர்கள் செழித்து வளரக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவோம். வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மகள்களுக்கு மேலும் சிறப்பான வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் கொண்டு வருவதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய முடியும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















