நாடு முழுவதும், முழு பொதுமுடக்கக் காலத்தில் இருந்தபோதிலும் உழவர்கள் தன்னலமின்றிக் கடுமையாக உழைத்ததன் காரணமாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் நாடு பட்டினி இல்லாமல் இருந்தது.
இந்தக் கடினமான காலங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக உழவர்களின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டியதில் வியப்பில்லை. கோவிட்-19 நோயைப் புறந்தள்ளி, உழவர்கள் கடினமாக உழைத்து நல்ல அறுவடை தந்ததால்,80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மத்திய அரசு, இலவச ரேஷன் பொருள்கள் அளிக்க முடிந்தது. பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 17,000 கோடி ரூபாய் செலுத்தப்படும் என்று 9 ஆகஸ்ட் அன்று பிரதமர் அறிவித்தார். முதல் தவணையாக 2000 ரூபாய் உழவர்களுக்கு ஏப்ரல் மாதமே அளிக்கப்பட்டுவிட்டது.
இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ், உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் அளிக்கப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாண்மை இயற்கையைச் சார்ந்ததாக இருப்பதால், உழவர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க இத்தொகை உதவியாக இருக்கும்.
உழவர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, குறிப்பாக பொது முடக்கக் காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுக்கு திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் உள்ள உழவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். கரூரில் குளித்தலை, தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த திரு.மணி என்கிற உழவர் அரசின் உதவியைப் பாராட்டியதோடு, பொதுமுடக்கக் காலத்தில் வருமானம் எதுவும் இல்லை என்பதால் இந்த உதவித்தொகையை மேலும் அதிகரிக்கும்படி அரசைக் கேட்டுக் கொண்டார்.
பெரம்பலூரில் உள்ள பொம்மனப்படியை சேர்ந்த உழவர் திரு. சின்னசாமி, கரூர் குளித்தலையைச் சேர்ந்த உழவர்கள் திரு பிரவீன், திரு.ராமதுரை பொதுமுடக்கக் காலத்தின் போது முன்னதாகவே வங்கிக் கணக்கில் செலுத்தியதற்காக நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவை சுயசார்பு இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று, குறிப்பாக பொதுமுடக்கக் காலத்தில், சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் விடுத்த அறைகூவலை, உழவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தியாவை, உணவுப் பாதுகாப்பில், சுயசார்பு நிலையை அடையச் செய்து, கோவிட்-19 நோய்க்கு எதிரான அரசின் போராட்டத்திற்கு உழவர்கள் தான் உதவியுள்ளனர். இதனால் இந்தியா, தனது குடிமக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை உற்பத்தி செய்ததோடு மட்டுமல்லாமல், இவை தேவைப்படும் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் தயார் நிலையில் உள்ளது. தேசம் உழவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்பதை, உழவர்கள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட உதவுவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசு வெளிப்படுத்துகிறது.