சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் உடான் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள சேவை செய்யப்படாத விமான நிலையங்களிலிருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,இது விமானப் பயணத்தை மக்களுக்கு மலிவு விலையில் அளிக்கிறது.
அதன் ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தொலைதூர பிராந்தியங்களில்,உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு உடான் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
உடான் திட்டத்தின் வரலாறு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மக்கள் செருப்பு அணிந்து விமானங்களில் ஏறுவதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார், இந்த உணர்வு மிகவும் உள்ளடக்கிய விமானத் துறைக்கான பார்வையைத் தூண்டியது. சாமானிய மனிதனின் கனவுகள் மீதான இந்த அர்ப்பணிப்பு உடான் பிறப்பதற்கு வழிவகுத்தது.
முதல் உடான் விமானம் ஏப்ரல் 27, 2017 அன்று புறப்பட்டது, இது, சிம்லாவின் அமைதியான மலைகளை,தில்லியின் பரபரப்பான பெருநகரத்துடன் இணைக்கிறது. இந்த முதல் விமானம், இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது,இது எண்ணற்ற குடிமக்களுக்கு வானில் பறக்கும் அனுபவத்தை அளித்தது.
இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் அளிப்பதில்உடான் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், இது பல புதிய மற்றும் வெற்றிகரமான விமான நிறுவனங்களின் தோற்றத்தை ஊக்குவித்துள்ளது.
ஃபிளை பிக், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர் மற்றும் ஃபிளை91 போன்ற பிராந்திய நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து, நிலையான வணிக மாதிரிகளை உருவாக்கி, பிராந்திய விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் சூழலியலுக்கு பங்களித்துள்ளன.
இந்தத் திட்டம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கடைசி மைல் இணைப்பை வழங்குவதற்கு மட்டும் அர்ப்பணிக்கப்படவில்லை; வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளது.
உடான் 3.0 போன்ற முயற்சிகள் வடகிழக்கு பிராந்தியத்தில் பல இடங்களை இணைக்கும் சுற்றுலா பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் உடான் 5.1 சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
குஜராத்தின் முந்த்ரா முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தேசு வரை, இமாச்சலப் பிரதேசத்தின் குலு முதல் தமிழ்நாட்டின் சேலம் வரை, உடான் திட்டம் நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 86 விமான நிலையங்கள் இயக்கப்பட்டுள்ளன, இதில் வடகிழக்கு பிராந்தியத்தில் பத்து மற்றும் இரண்டு ஹெலிபோர்ட்கள் அடங்கும்.
நாட்டில் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 74 ஆக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது, மேலும் 2047 க்குள் இந்த எண்ணிக்கையை 350-400 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது, இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.
71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் மற்றும் 2 நீர் ஏரோட்ரோம்கள் உட்பட மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்படுகின்றன, இது 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களில் 1.44 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்க உதவுகிறது.
உடான் என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல; இது ஒவ்வொரு இந்தியருக்கும் பறக்கும் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இயக்கமாகும். பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் மலிவு விலையை உறுதி செய்தல் ஆகியவை எண்ணற்ற குடிமக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியுள்ளன.
அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தைத் தூண்டுகின்றன.வானம் உண்மையிலேயே அனைவருக்கும் எல்லை என்பதை உறுதி செய்கிறது. பின்தங்கிய பிராந்தியங்களை இணைப்பதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன்,உடான் திட்டம் இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்று சக்தியாக உள்ளது, இது இணைக்கப்பட்ட மற்றும் வளமான தேசம் என்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.