கடந்த திமுக ஆட்சியின்போது உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை கடந்த ஜூன் 28ம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்க்ப்பட்ட நிலையில்,தற்போது தி.மு.க ஆட்சி என்பதாலும் தமிழக அரசின் கீழ் லஞ்சஒழிப்பு துறை செயல்படுவதாலும் மேல் முறையீடு செய்யவில்லை. இதனை கவனித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து சீராய்வு செய்ய உள்ளதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த மறு ஆய்வு வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனு மீண்டும் அமைச்சர் பொன்முடிக்கு சிக்கலை ஏற்படுத்துமா இல்லை விடுதலை செய்யப்படுவாரா என்பது இன்று 10 ஆம் தேதி தெரியவரும்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















