தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் அன்பும் அக்கறையும் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் என்றும் அவரது வருகையால் தமிழ்நாட்டின் வளர்சி மிளிரட்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் அவர்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம்
ரூ.200 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை
ரூ.99 கோடியில் மதுரை – போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை
ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதை ரூ.283 கோடியில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என, சுமார் ரூ.4.500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை இந்தமுறை பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 ‘மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டுசெல்வதற்காக ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற கட்டமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு வரும் பிரதமர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















