16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கசான் நகரில் சந்தித்தார்.இந்த ஆண்டில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர்.முன்னதாக கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தனர்.
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்காக அதிபர் புதினுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றுடன் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். புதுதில்லியில் 2024 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் கூட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பலதரப்பு அமைப்புகளில், குறிப்பாக பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா-ரஷ்யா இடையேயான ஈடுபாடு குறித்து தலைவர்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைனில் நடந்து வரும் மோதல் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மோதல்களைத் தீர்ப்பதில் பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னோக்கிய வழி என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்ந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருவதுடன், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் பின்னணியில் மீள்திறனைக் காட்டுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 23-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
அதிபர் அவர்களே,உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
அதிபர் அவர்களே,கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் நமது நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நட்புறவை பிரதிபலிக்கின்றன. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் மூலம் ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.
அதிபர் அவர்களே,கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் தனித்துவமான அடையாளத்தை நிறுவியுள்ளது. இப்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் அதில் இணைய விரும்புகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அதிபர் அவர்களே,ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்டது போல, பிரச்சினைகளின் தீர்வு அமைதியான வழிமுறைகள் மூலம் மட்டுமே களையப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. எதிர்காலத்திலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.
அதிபர் அவர்களே,இந்த அனைத்து அம்சங்களிலும் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இன்று மற்றொரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும், பல நன்றிகள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















