சுய உதவி குழு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட – தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுதாயபெண்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்நிகழச்சியில், நாடு முழுவதும் உள்ள சுயஉதவிக் குழு பெண்களின் வெற்றிக் கதைகள் அடங்கிய தொகுப்பு, விவசாய வாழ்வாதாரங்களின் உலகமயமாக்கல் குறித்த கையேட்டையும் பிரதமர் வெளியிட்டார்.
4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மூலதன நிதியுதவியாக ரூ.1625 கோடியை பிரதமர் விடுவித்தார். மேலும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிற்றுணவு பதப்படுத்தும் தொழில்கள் முறைப்படுத்தும் (PMFME) திட்டத்தின் கீழ், 7500 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொடக்க நிதியாக ரூ.25 கோடி மற்றும் 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் செய்கின்ற பணியை பற்றி கேட்டறிந்தார்
அப்பொழுது பெண்கள் சுய உதவி குழு தலைவி ஜெயந்தி பேசியபோது நாங்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகளால் நீர்நிலைகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்கள் மாசு அடைந்து விட்டது, அதேபோல் கால்நடைகளும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து எங்களது பகுதி பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் ஊராட்சி பகுதியில் வீசப்பட்டுள்ளதை சேகரித்து மறுசுழற்சி மூலம் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தும் வகையில் தார்சாலைக்கு அனுப்பி வைத்தோம். தொடர்ந்து 10 வருடங்களாக நாங்கள் இப்பணி செய்து வருகிறோம்.
ஐந்து ரூபாய்க்கு கழிவுகளை வாங்கி மறுசுழற்சி மூலம் 30 ரூபாய்க்கு ஒரு கிலோ என்று விற்பனை செய்து வருகிறோம். இதனால் பெண்கள் முன்னேற்றம் அடையவும் அதேபோல் எங்களது வாழ்வாதாரம் மேம்படவும் எங்களுக்கு ஒரு கைத்தொழிலாக அமைந்து விட்டது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்து வாழ்த்துக்கள் கூறியும் அதேபோல் அருகில் இருந்த பஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் சுய உதவி குழுக்களுடன் பேசிய பிரதமர் மோடி : கொரோனா காலத்தில் சுய உதவிக் குழு பெண்கள், இதற்கு முன் யாரும் செய்யாத அளவில் மிகச் சிறப்பான சேவைகள் ஆற்றியதை பிரதமர் பாராட்டினார். முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் தயாரிப்பு மற்றும் தேவையானவர்களுக்கு உணவு அளித்தது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்றவற்றில் சுய உதவிக் குழு பெண்களின் ஈடுஇணையற்ற பங்களிப்பை பிரதமர் அங்கீகரித்தார்.
பெண்கள் இடையே தொழில்முனைவு நம்பிக்கையை அதிகரிக்கவும், தற்சார்பு இந்தியா தீர்வுக்கு பெண்கள் இடையே அதிக பங்களிப்புக்கும், ரக்ஷா பந்தனை முன்னிட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு மிகப் பெரிய நிதியுதவி இன்று அளிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு மற்றும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் ஆகியவை இந்தியாவின் ஊரக பகுதிகளில் புதிய புரட்சியை கொண்டு வந்துள்ளது. சுய உதவிக் குழு பெண்களின் இந்த இயக்கம் கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 70 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆட்சியில், கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு வங்கி கணக்கு இல்லை, வங்கி முறையிலிருந்து அவர்கள் வெகு தொலைவு விலகியிருந்தனர் என பிரதமர் நினைவுக் கூர்ந்தார். அதனால்தான், ஜன்தன் கணக்கை தொடங்க, இந்த அரசு மிகப் பெரிய பிரச்சாரத்தை தொடங்கியது என அவர் கூறினார். இன்று 42 கோடி ஜன்தன் கணக்குகள் உள்ளதாகவும், இதில் சுமார் 55 சதவீதம் பேர் பெண்கள். வங்கியிலிருந்து கடன் பெறுவதை எளிதாக்க, ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன என அவர் கூறினார்.
தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ் சகோதரிகளுக்கு இந்த அரசு வழங்கிய உதவித் தொகை, முந்தைய அரசுகள் வழங்கியதை விட பல மடங்கு அதிகம் என பிரதமர் கூறினார். சுய உதவிக் குழுக்களுக்கு, சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு உத்திரவாதமின்றி கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், வங்கி கடனை திருப்பி செலுத்தியதில், சுய உதவிக் குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் வங்கிகளின் வாராக் கடன்கள் 9 சதவீதமாக இருந்தன. தற்போது அது 2 முதல் 3 சதவீதமாக குறைந்துள்ளன. சுயஉதவிக் குழு பெண்களின் நேர்மையை அவர் பாராட்டினார்.
தற்போது, சுய உதவிக் குழுவினருக்கு, உத்திரவாதமின்றி அளிக்கப்பப்படும் கடன் வரம்பு இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக அளிக்கப்படுகிறது என பிரதமர் அறிவித்தார். கடன் கணக்குடன், சேமிப்பு கணக்குகளை இணைக்கும் நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பல முயற்சிகளுடன், தற்சார்பு பிரச்சாரத்தில் பெண்களால் முன்னோக்கி செல்ல முடியும் என அவர் மேலும் கூறினார்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், புதிய இலக்குகளை நோக்கி, புதிய சக்தியுடன் முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது என பிரதமர் கூறினார். தற்போது நமது சகோதரிகளின் கூட்டு சக்தியும், புதிய பலத்துடன் முன்னேற வேண்டும். சகோதரிகள் அனைவரும் நமது கிராமங்களை வளமாக மாற்றும் சூழலை மத்திய அரசு தொடர்ந்து உருவாக்குகிறது.
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறையில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு முடிவில்லா வாய்ப்புகள் உள்ளன என பிரதமர் கூறினார். சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளதால், இதிலிருந்து சுய உதவிக் குழுவினர் நிதியுதவி பெற்று வேளாண் அடிப்படையிலான வசதிகளை உருவாக்க முடியும். நியாயமான கட்டணம் மற்றும் வாடகையை நிர்ணயம் செய்வதன் மூலம், அனைத்து உறுப்பினர்களும் இந்த வசதிகளின் சாதகத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்,
புதிய வேளாண் சீர்திருத்தங்களால், நமது விவசாயிகள் மட்டும் அல்ல, சுய உதவிக் குழுவினரும் பயன்பெற எல்லையற்ற வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது சுய உதவிக் குழுவினர், விவசாயிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, வீடுகளுக்கு நேரடியாக விற்க முடியும்.
எவ்வளவு பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடு இல்லை என அவர் கூறினார். பண்ணையிலிருந்து நேரடியாக விற்கவும் அல்லது உணவு பதப்படுத்தும் ஆலையை ஏற்படுத்தி பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்புகள் சுயஉதவிக் குழுவினருக்கு உள்ளது. ஆன்லைன் நிறுவனங்களுடன் இணைந்து, சுய உதவிக் குழுவினர் தங்கள் தயாரிப்புகளை நகரங்களில் விற்கலாம்.
இந்தியாவில் பொம்மைகள் செய்வதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது, இதற்காக சாத்தியமான உதவிகளை அரசு வழங்குகிறது. குறிப்பாக பழங்குடியின பகுதிகளில் உள்ள நமது சகோதரிகள், பொம்மை தயாரிப்பில் பாரம்பரியமாக தொடர்புடையவர்கள். இதிலும், சுய உதவிக் குழுவினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை நாட்டிலிருந்து ஒழிக்கும் பிரச்சாரம் தற்போது நடக்கிறது என பிரதமர் கூறினார். இதில் சுய உதவிக் குழுவினர் இரண்டு வகையில் செயல்படலாம். ஒரு முறை பயன்படுத்தும நெகிழி குறித்து சுயஉதவிக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் இதற்கு மாற்றான பொருளை தயாரிக்க பணியாற்ற வேண்டும். அரசின் மின்னணு-சந்தையை சுய உதவிக் குழுவினர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது, இந்தியாவை மாற்றுவதில், நமது சகோதரிகள் மற்றும் புதல்விகள் முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என அவர் கூறினார்.
அனைத்து சகோதரிகளுக்கும் வீடு, கழிவறை, மின்சாரம், குடிநீர் மற்றும் எரிவாயு வசதிகள் அளிக்கப்படுகின்றன என பிரதமர் கூறினார். சகோதரிகள் மற்றும் புதல்விகளுக்கு கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் இதர தேவைகளை வழங்குவதில் அரசு முழு உணர்வுபூர்வமாக செயல்படுகிறது. இதன் காரணமாக, பெண்களின் கவுரவம் மட்டும் அல்ல, நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளின் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.
நாட்டை மேம்படுத்தும் முயற்சிகளில், அம்ரித் மகோத்சவத்தையும் தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும் என சுய உதவிக் குழுவினரை பிரதமர் வலியுறுத்தினார். 8 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள் மற்றும் புதல்விகளின் ஒட்டு மொத்த சக்தி மூலம், அம்ரித் மகோத்சவத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் கூறினார். சேவை உணர்வுடன் செயல்படுவது குறித்து சுய உதவிக் குழுவினர் சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம், கொவிட்-19 தடுப்பூசி பிரச்சாரம், கிராமங்களில் தூய்மை மற்றும் நீர்வள பாதுகாப்பு போன்ற பிரச்சாரங்களை செயல்படுத்தப்படுவதை அவர் உதாரணமாக எடுத்து கூறினார். அருகில் உள்ள பால் பண்ணைகள், சாண எரிவாயு ஆலைகள், சூரிய மின்சக்தி ஆலைகள் போன்றவற்றை சுய உதவிக் குழு பெண்கள் பார்வையிட்டு, அங்கு பின்பற்றப்படும் சிறந்த முறைகளை கற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.