சிறுவனும் அன்னையும் வழக்கமாகச் செல்லும் பாதை தானாம். பார்வைக் குறைபாடு கொண்டவர் எனினும் இடது ஓரமாகவே தன் மகனை எப்போதும் அழைத்துச் செல்பவராம். அன்று அன்னைக்கும் மகனுக்குமான சுவரசியப் பேச்சினூடே, மகன் எதையோ காண்கிறான், தன் கையுயர்த்தி அதை அன்னைக்கும் காட்ட விழைகிறான், பாதை விலகி விடுகிறான், கணப்பொழுதில் அது நிகழ்ந்து விடுகிறது.
இரும்புத் தண்டவாளத்தின் மீது விழுந்தாலும், எத்தனை வேகமாக எழுகிறான் பாருங்கள். பயமில்லை! திணறவில்லை! காரணம், பார்வையற்ற அன்னைக்கு நாம் தானே கண்கள் என்பதை அவன் நன்றாகவே அறிவான், ஆனால் அவனது உயரத்தை விட சற்று உயரமாக மேடை அமைந்து போனது தான் துயரம். அதே நொடி தான் பாதை விலகி விட்டோம் என்று தரையைத் தடவி உணர்ந்து கொள்கிறாள் அன்னை. தவறு, பெருந்தவறு செய்துவிட்டேன், எங்கிருக்கிறோம், என்ன ஆயிற்று, எப்படியாவது மேலே வாடா !! எனப் பதறியிருக்க வேண்டும், ரயில் சத்தம் வேறு மிரட்டியிருக்கும், மகன் ஒரு புறம் கதற, பார்வையற்ற அன்னை ஒரு புறம் பதற, புயலென ஓடி வருகிறான் மீட்பன்.
சரளைக் கற்களின் மீது சாதாரணமாக ஓடுவதே அசாத்தியம், அதிலும் எமனென எதிரில் வரும் ரயிலை எதிர்த்து ஓடுவதெல்லாம் இறை சக்திக்கு அப்பாற்பட்ட அதி சக்தி. உதவும் குணம் கொண்ட மனிதருக்கே அது வாய்க்கப்பட்டது. அத்தனை வேகமாக ஓடி வரும்போது ‘உன்னால் முடியுமா’ என அவரைக் குறுவினாடி தயங்கி யோசிக்க வைத்தது அனிச்சை குணம் கொண்ட மூளை.. ஓடு நண்பா ! உன் உயிரை விட குழந்தை முக்கியம் என தொடர்ந்து ஓட வைத்தது அன்பு குணம் கொண்ட இதயம்.
தன்னை பற்றி சிந்திக்காமல் ஆபத்தில் இருக்கும் ஒருவரின் உயிரை சமயோசிதமாகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியரின் மனசுதாங்க கடவுள் ?