தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கண்டனம்!
தமிழக பாஜக இனைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில், இரவிகுளம் தேசிய பூங்கா அருகே உள்ள பெட்டிமுடி எஸ்டேட்டில் இன்று (07.08.2020) அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன. தூங்கிக்கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பலியாகியிருக்கிறார்கள். அந்த இடிபாடுகளில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், பலி எண்ணிக்கை 80-க்கு மேல் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 15 வயதிற்கு குறைவான குழந்தைகள் பலர் இதில் உயிரோடு சமாதியாகி உள்ளனர். இதுதவிர ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
180 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மூன்று காலனிகள் இப்போது நிலச்சரிவுக்கு இறையாகி உள்ளன. காலாவதியான இந்த காலனிகளில்தான், தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் தலைமுறை, தலைமுறையாக காலம் தள்ளி வந்துள்ளனர்.
இந்த வீடுகளை இடித்துவிட்டு பாதுகாப்பான புது வீடுகள் கட்டித் தருமாறு கேரள முதல்வர் திரு.பிணராயி விஜயன் அவர்களிடம், நம் தமிழ் சொந்தங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் செவி சாய்க்காததுதான், இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நம் தமிழ் சொந்தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது.
நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையை உடனடியாக அனுப்பி மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளார்கள். இது சற்று ஆறுதலை அளிக்கிறது.மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயையும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நம் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக பாஜக இளைஞர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















