உத்தரப்பிரதேச மாநிலம்,வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பாரதபிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
மேலும்,பிரதமமந்திர் கிசான் திட்டத்தின்கீழ் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு,20-வது தவணைத் தொகையாக, தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 20,500 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய பாரத பிரதமர் மோடி, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, தான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.
நமது மகள்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்குவதாகத் தான் சபதம் செய்திருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதை மகாதேவரின் ஆசீர்வாதத்துடன் நிறைவேற்றியதாகத் தெரிவித்தார்.
மேலும், சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து,பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இந்தியா அழித்ததைக் காங்கிரஸாலும், அவர்களின் நண்பர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரையும், நமது வீரர்களின் வலிமை பற்றியும் காங்கிரஸால் எப்படி கேள்வி எழுப்ப முடிகிறது என்று வேதனை தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினேன். மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் சைவ மரபின் பழங்கால மையம் ஆகும். வட இந்தியாவில் இருந்து கங்கை நீரை பெற்று, வடக்கையும், தெற்கையும் அவர் இணைத்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ராஜேந்திர சோழன் அறிவித்தார். இன்று, காசி – தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அதே கொள்கையை நாம் முன்னெடுத்து செல்கிறோம்.
ராஜேந்திர சோழன் கங்கை நீரை எடுத்து சென்றதுபோல, ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நானும் கங்கை நீருடன் அங்கு சென்றேன். கங்கை நீரால் சுவாமிக்கு பூஜை செய்தேன். அன்னை கங்கையின் ஆசீர்வாதத்தால் மிகவும் புனிதமான சூழலில் அங்கு பூஜை நிறைவடைந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
