‛பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார். காஷ்மீர் விவகாரத்தை தைரியமாகவும், அழகாகவும் மோடி கையாள்வார்” என்று பல்வேறு பிரபலங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி மீது நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை வைத்து பேசினார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் WAVES மாநாடு என்பது இன்று தொடங்கியது. இந்த மாநாடு மொத்தம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. ‘வேவ்ஸ்’ உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு என்பது மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் லிபரப்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் தாக்குதல் பற்றியும், அதனை பிரதமர் மோடி கையாள்வது பற்றியும் கருத்து தெரிவித்தார்.அப்போது பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி மீண்டும் காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார் என்று ரஜினிகாந்த் கூறினார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: WAVES மாநாட்டை அரசு தள்ளிவைக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். தற்போதைய சமயத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்பதால் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று கூறினார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடியின் மீதான நம்பிக்கையால் குறித்த நாளில் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று உறுதியாக நம்பினேன். இப்போது நடந்து விட்டது.பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். இதனை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாம் அவரை பார்த்து கொண்டே இருக்கிறோம். காஷ்மீர் தாக்குதலை அவர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது காட்டுமிராண்டித்தனமானது. இரக்கமற்றது. காஷ்மீரில் அமைதியை கொண்டு வந்து நாட்டின் புகழ்பெற வைப்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதின் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.அதாவது தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்களை நம் நாடு தயாராக வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முப்படைகளுக்கும் பிரதமர் மோடி சுதந்திரம் வழங்கி உள்ளார். இதனால் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியை நம் படை வீரர்கள் உரிய நேரத்தில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசி உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராக உள்ளார். பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார். இந்து சமயத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதும், சனாதன தர்மத்துக்கான சேவை செய்வது உள்ளிட்டவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாக உள்ளது.
இதன் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். திட்டங்களின் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ரஜினிகாந்த் பேசியதாவது:- செல்போன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில முதியோர் கூட மூழ்கி கிடப்பதால் நமது நாட்டின் பெருமை மிக்க கலாசாரம், அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடுகிறது என்றும் மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி இளைஞர்கள் செல்கிறார்கள் எனவும் ரஜினிகாந்த் நேற்று பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்திடம், மேற்கத்திய நாடுகளின் தாக்கம் தான் இங்கு அதிகமாக இருக்கிறது, நம்முடைய தாக்கம் அங்கு அதிகரித்துவிட்டது என்று ரஜிகாந்த் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு லதா ரஜினிகாந்த் அளித்த பதில் வருமாறு:-
எந்த ஒரு புது விஷயத்தையும் ஏற்றுக்கொள்வது தவறில்லை. குளோபல் அவர்னஸ் இருப்பது தவறில்லை. ஆனால் இந்திய மனப்பான்மை போய்விட கூடாது. நம் வாழ்வு முறை, நம் முன்னோர்கள் காட்டிய அழகான வாழ்க்கை முறை போய்விட கூடாது. எதற்கும் அடிமை ஆகிட கூடாது.
ஒரு உடையாலோ, பேசுகின்ற முறையாலோ, ஒருத்தரது வாழ்க்கை முறையாலோ இது நிர்ணயிக்கப்படுவது இல்ல. மனதார இந்தியர்களாக இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் இந்தியத்துவம் என்பது நம்மிடமும், நாம் இருக்கும் இடத்திலும், நம்மை பாதுகாக்கின்ற சூழலிலும் அது இருத்தல் வேண்டும்.
அது நமக்கு மட்டுமில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களும் அவர்கள் அவர்கள் நாட்டை மனதில் வைத்திருப்பார்கள். அதுமாதிரி இந்தியத்துவம் என்பதற்கு ஒரு உயர்ந்த பண்பாடு இருக்கிறது. அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும். பண்பாடு என்பது மனதில் இந்தியர் என்பதை ஆரோக்கியமாக வைத்திருப்பது தான். ஒருத்தர் ஒரு ஆடை அணிவதாலோ, பேசுகிற மொழியினாலோ எல்லாம் கிடையாது. நீங்க குளோபல் சிட்ன்ஸாகவும் இருக்கலாம். 100 சதவீதம் இந்தியனாகவும் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.