மேற்குவங்க எல்லையில் பீரங்கியுடன் ஆயுதபூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்.

தசரா பண்டிகையை முன்னிட்டு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,2024 அக்டோபர் 12 அன்று மேற்கு வங்கத்தில் உள்ள சுக்னா ராணுவ தளத்தில் பாரம்பரிய சாஸ்திர பூஜை மேற்கொண்டார். இந்த குறிப்பிடத்தக்க விழா ராணுவ ஆயுதங்களை மதிப்பதைக் குறிக்கிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலச பூஜையுடன் சடங்குகளைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து சாஸ்திர பூஜையும் வாகன பூஜையும் நடைபெற்றது. அதிநவீன காலாட்படை, பீரங்கி அமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்களுக்கும் அவர் பூஜை செய்தார். ராணுவ வீரர்களுடன் பாதுகாப்புதுறை அமைச்சர் கலந்துரையானியதுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது உரையில், எல்லைகளில் அமைதி, நிலைத்தன்மையை பராமரிப்பதில் ஆயுதப்படைகளின் கண்காணிப்பையும் முக்கிய பங்கையும் பாராட்டினார். தசரா பண்டிகை, தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியா எந்த நாட்டையும் வெறுப்பினாலோ, அவமதிப்பினாலோ, தாக்கியதில்லை என்று அவர் தெரிவித்தார். நமது இறையாண்மைக்கு யாராவது பங்கம் விளைவிக்கும்போது அல்லது தீங்கு விளைவிக்க முயற்சிக்கும்போது மட்டுமே நாம் போராடுகிறோம் என்று அவர் தெரிவித்தார். நமது நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஒரு பெரிய முடிவை எடுக்க இந்தியா தயங்காது என்றும் அவர் கூறினார். சாஸ்திர பூஜை என்பது தேவைப்படும்போது, ஆயுதங்கள் முழு சக்தியுடன் பயன்படுத்தப்படும் என்பதைச் சொல்லும் நிகழ்வாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திரதிவேதி, கிழக்கு கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராம் சந்தர் திவாரி, எல்லை சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரகு சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version