இராமகோபாலன் மறைவு:பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் இரங்கல்.

வீரத்துறவி இராமகோபாலன் மறைவொட்டி பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

இந்துக்களுக்காக வாதாடவும், போராடவும், பரிந்து பேசவும் தொடங்கப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். இதன் அமைப்பாளராக தனது 94-வது வயது வரை செயல்பட்டு வந்தவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்.

 தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டு வங்கி காரணமாக பெரும்பான்மை  இந்துக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றனர். இந்துக்கள் தங்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுக்க நாதியற்றவர்களாக இருந்ததை பார்த்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன், இந்துக்களின் உரிமைகளைப் போராடி பெறுவதற்கு ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார். அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், இந்து முன்னணி பேரியக்கம். 

இந்து முன்னணியை தோற்றுவித்தவுடன், ஐயா தாணுலிங்க நாடாரை கண்டெடுத்து, அவரை இந்து முன்னணியின் முதல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட வைத்தார் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். ஐயா தாணுலிங்க நாடார், தனது இறுதி மூச்சு வரை இந்து முன்னணியின் தலைவராக இருந்து இந்துக்களுக்காக போராடினார்கள், வாதாடினார்கள், பரிந்து பேசினார்கள்.

வீரத்துறவி ஐயா இராமகோபாலன், 1927-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் பொது சேவை மற்றும் தேச தொண்டால் இயக்கப்பட்டு, தான் பார்த்து வந்த மின்சாரத்துறை அரசு வேலையை உதறி தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். 1948-இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போதும், 1975-ஆம் ஆண்டு அவசரநிலை காலகட்டத்திலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வழிநடத்தியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன். 

இந்து முன்னணி பேரியக்கம் தொடங்கப்பட்ட பிறகு, முழு நேரமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக 1984-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் வைத்து வீரத்துறவி ஐயா இராமகோபாலன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக ஐயா உயிர் தப்பினார். இருந்தாலும் கழுத்திலும், தலையிலும் பலத்த வெட்டுகளால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தன. அவற்றை மறைப்பதற்காகதான் அவர், இறுதிவரை தலையில் காவி தொப்பியை அணிந்து வந்தார்.

https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A

இன்று தமிழகமெங்கும் இந்துக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் வீரத்துறவிதான். எங்களைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஊட்டியவர் வீரத்துறவி ஐயா இராமகோபாலன்தான். எங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் அவர்.

இன்று அவர் நம்மோடு இல்லை. அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்வதுதான் நாம் அவருக்கு செய்கின்ற அஞ்சலி ஆகும். அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட. வீரத்துறவி ஐயா இராமகோபாலனின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அதோடு அவர் விட்டு சென்ற பணிகளை தொடருவோம்.    

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் குறிப்பிட்டுள்ளார்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version