அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30‍ம் தேதி தீர்ப்பு !

அத்வானி உள்பட 32 பேருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், வருகிற 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண்சிங், உமா பாரதி, பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ், முன்னாள் எம்.பி. வினய் கட்டியார் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மே 31-ம் தேதி அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் 17 பேர் இறந்து விட்டனர்.


அதனால், அத்வானி உள்பட மீதி 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தனி நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ஓய்வுபெற்ற போதிலும், விசாரணையை முடிப்பதற்காக உச்சநீதிமன்றம்  அவருக்கு பதவி நீட்டிப்பு அளித்தது. ஆகஸ்டு 18-ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. பின்னர், செப்டம்பர் 30-ம் தேதிவரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.


அதனால், அதற்கு முன்பு, அத்வானி உள்ளிட்டோரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலமே ஆஜராகினர். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் காரணங்களுக்காக வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்த மாதம் 30-ம் தேதி, விசாரணை முடிவடைந்தது. பிறகு, கடந்த 2-ம் தேதி, அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். அன்றே தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், வருகிற 30-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி எஸ்.கே.யாதவ் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே செப்டம்பர் 30-ம் தேதிதான், அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version