திருவனந்தபுரம்,மலையாள திரைப்பட நடிகர் சித்திக், 2016ல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அவர் மீது கேரள போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, மலையாள நடிகர் திலீப் மீது 2017ல் புகார் எழுந்தது.
இதையடுத்து, மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்க,ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில், பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பின், பலநடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா என்பவர், பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் 2009ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு கூறினார். போலீசார் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் வகித்து வந்த கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்நிலையில், பிரபல மலையாளர் நடிகர் சித்திக் 2016ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மற்றொரு நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.