கொரோனலிருந்து குணமடைதல்: இருட்டுக் குகையின் முடிவில் தெரியும் நம்பிக்கை ஒளி!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முப்பத்து இரண்டு கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து ஏப்ரல் 16-ம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். முறையான கவனிப்பு மூலம், இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளது.

கொடிய கொவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுப்பதில் நாம் ஒன்றுபட்டு போராடி வருகிறோம். மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பு, தொற்று அறிகுறியுள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள்  ஆகியவை கொரோனோ பரவுவதை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிரத்தையான கவனிப்பு காரணமாக கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வருவதை அறிந்து பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். ஷேக் முகமது, தாம் குணமடைந்தது பற்றிய அனுபவத்தை திருச்சி கள மக்கள் தொடர்பு அலுவலரிடம் (எப்ஓபி) பகிர்ந்து கொண்டார். தில்லியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மார்ச் 19-ம் தேதி தாம் சென்றதாகவும், அந்தப் பயணத்தைக் சுருக்கிக் கொண்டு மார்ச் 24-ம் தேதி சென்னை திரும்பியதாகவும் அவர் கூறினார். விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று கூறிவிட்ட போதிலும், அரசின் அறிவுரைப்படி, சுய தனிமைப்படுத்துதலில் தாம் இருந்ததாகத் தெரிவித்தார். மாநில அரசின் யோசனைப்படி, ஏப்ரல் 1-ம்தேதி அவர் திருச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

மாநாட்டில் கலந்து கொண்ட 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் உள்பட 35 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்தச் செய்தியை அறிந்ததும் தாம் மிகவும் வருத்தமடைந்ததாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் தாம் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், தனிப்பட்ட முறையில் மிகுந்த சிரத்தையுடன் தம்மைக் கவனித்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தலைவலி, இருமல், அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால்,  தவறாமல் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

உரிய கவனம் செலுத்தி, தீவிரக் கண்காணிப்புடன் மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளைக் கவனித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு தனிப்பட்ட முறையில் நோயாளிகளின் நலன் பற்றி விசாரித்து அறிந்து வருவதாகக்  கூறிய அவர்,  நிர்வாகம் அதிகபட்ச கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். இட்லி, சாதம், பருப்பு, பால், முட்டை, ஆரஞ்சுப் பழம், வாழைப்பழம் உள்ளிட்ட மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக டாக்டர். ஷேக் முகமது கூறினார். ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மீண்டும் நடத்தப்பட்ட கொவிட்-19 சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

டாக்டர் ஷேக் உள்பட குணமடைந்த 32 பேரையும் மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.வனிதா மற்றும் இதர மருத்துவக் குழு உறுப்பினர்கள் அன்பான முறையில் வழியனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, தியானம், தொழுகை, ஆன்லைன் செய்திகளை வாசித்தல், பழைய நண்பர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடல் என அதனை டாக்டர் ஷேக் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தல், மருத்துவமனை அதிகாரிகள் கூறுவதை விடாமுயற்சியுடன் பின்பற்றுதல் ஆகியவை துரிதமாகக் குணமடைவதற்கும், கொடிய கொவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் முக்கியமான காரணிகள் என்பதை டாக்டர். ஷேக் ஒப்புக்கொண்டார்.

நோயாளிகளின் உறவினர்களையும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, சில வருந்தக்கூடிய நிகழ்வுகள் ஏற்பட்டன. முறையான சோதனை மற்றும் மருத்துவமனை சிகிச்சை மூலமே கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என விளக்கிக் கூறி ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்தி, வெற்றிகரமாக நம்பிக்கையூட்டியதாக அவர் கூறினார். டாக்டர் ஷேக்கின் கூற்று மிகச்சரியானதாகும். முழுமையான ஊரடங்கு, ஈடுபாட்டு உணர்வு கொண்ட மருத்துவமனை கவனிப்பு ஆகியவற்றால், தமிழகத்தில் கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தினசரி வெளியாகும் மாநில மருத்துவ செய்திக்குறிப்பு இந்த உண்மையைப் பறைசாற்றும் மதிப்புமிகு சான்றாகும்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version