குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் தனிப்பெரும் செல்வாக்குமிக்க சதாவதானியின் பேரன் பாவலர் சித்திக்,வல்லமை பொருந்தியவர் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாவலர் சித்திக் எப்போதும் நடக்கும் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம். அதுபோல் மும்மதத்தினரும் அவரைப் பேசவும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அழைப்பார்கள். பாவலர் சித்திக், கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் ஜமாத் தலைவராகவும் உள்ளார்.
அண்மையில், நடைபெற்ற நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில், மதநல்லிணக்க விழா நடிப்பெற்றது. அதில் இஸ்லாமிய மக்கள் சார்பில் பாவலர் சித்திக் கலந்து கொண்டார். அதில் பேசியதோடு, அக்னி குண்டத்தில் பாவலர் சித்திக் நெய் ஊற்றவும் செய்தார். இது, குமரி மாவட்ட இஸ்லாமியக் குழுவினர் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பின் தலைவர் கமால்தீன், “பாவலர் சித்திக் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் இஸ்லாத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரு ஜமாத்தின் தலைவராக இருக்கும் தகுதி போய்விட்டது” என அறிவித்துள்ளார்.
இதேபோல் முகநூலிலும் இஸ்லாமியர்கள் பலரும் பாவலர் சித்திக்குக்கு அறிவுரை கூறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அவர் அங்கு உரையாற்றிவிட்டு மட்டும் வராமல், அக்னி குண்டம் முன்பு அமர்ந்தது இஸ்லாத்துக்கு எதிரானச் செயல் என கொந்தளித்து வருகிறார்கள். இதுவே இந்து மதத்தை சேர்ந்தவர் வேறு மத பண்டிகைக்கு சென்று அவர்களின் மத நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றால் மத சாயம் பூசி மத வெறியர் என பட்டம் சூட்டி ட்ரென்ட் செய்து விடுவார்கள்.
ஆனால் இந்தசம்பவம் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை மதமென பிரிந்தது போதும் என யாரும் பாடுபடவில்லை. ஏன் என புரியவில்லை. முக்கியமாக திருமாவளவன் சமூக நீதி காவலர்கள் யாரையும் இந்த விஷயத்தில் தலையிடாமல் ஓரமாய் நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்நிலையில் பாவலர் சித்திக் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், “சமுதாய நற்பணிகளில் 50 ஆண்டுகளாக பணிபுரியும் நான் எந்தத் தவறான, மார்க்கத்திற்கு விரோதமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. இதுநாள்வரை நூற்றுக்கணக்கான மத நல்லிணக்க, மனிதநேய விழாக்களில் கலந்துகொண்டு பேசியுள்ளேன்
அந்த விழாக்களில் பல்வேறு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்கள், எம்எல்ஏ, எம்பி, பல்சமய மதகுருக்கள், அறிஞர் பெருமக்கள் கலந்ததுண்டு. அதில் நானும் சிறப்புரை ஆற்றிவிட்டு வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன் நடந்த மும்மத விழாவில் மத நல்லிணக்க அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன்
விழாவில் வாழ்த்துரை வழங்கிய பின்பு, அங்கு நடந்த மதச் சடங்கில் சூழ்நிலையின் காரணமாக கலந்துகொண்டேன். மார்க்க அறிஞர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டி தவ்பா செய்து கொண்டேன். எல்லாம்வல்ல இறைவன் பொருந்திக்கொள்வான், ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை உள்ளது. இனி, இது தொடர்பான விவாதங்களை சமுதாய மக்கள் தவிர்க்க அன்பாய் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்க விழாவில் பங்கேற்று, சமூக நல்லிணக்கத்தைப் பேணியவர், சொந்தச் சமூக மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.