மருத்துவ துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் திட்டம்… தேசிய மருத்துவர்கள் தினத்தில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

நேற்று தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ஆண்டு தோறும் டாக்டர் பிசி ராயின் நினைவாகக் கொண்டாடப்படும் தேசிய மருத்துவ தினம், நமது மருத்துவப் பணியாளர்களின் உயரிய கொள்கைகளைக் குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளதுபிரதமர் மோடி அவர்கள் கூறினார் . கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக கொரோனா எனும் பெருந்தொற்றின் கடுமையான சவால்களின் போது சிறந்த சேவையை அளித்து வரும் மருத்துவர்களுக்கு 130 கோடி இந்தியர்களின் சார்பாக அவர் நன்றி தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடியனார் பிரதமர் மோடி.

மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், பெருந்தொற்றின்போது அவர்களது வீரமிக்க நடவடிக்கைகளை நினைவு கூர்ந்ததுடன், மனித சமூகத்திற்கு சேவையாற்றுகையில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். கொரோனா தொற்று முன்வைத்த அனைத்து சவால்களுக்கும் நமது விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தீர்வுகளைக் கண்டறிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நமது மருத்துவர்கள், இந்த புதிய மற்றும் விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்றைத் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தால் எதிர்கொண்டு வருகிறார்கள். நீண்ட காலமாக கவனிக்கப்படாத மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் அழுத்தத்திற்கு இடையேயும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் ஏற்பட்ட பாதிப்பும் உயிரிழப்பு வீதமும் கையாளக் கூடிய வகையிலேயே இன்னமும் உள்ளது. உயிரிழப்புகள் எப்போதுமே வலியைத் தரும், ஆனால் ஏராளமான உயிர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல்வேறு உயிர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு, கடுமையாகப் பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்களே காரணம் என்று பிரதமர் கூறினார்.

மருத்துவத் துறையை வலுப்படுத்துவதில் அரசின் கவனம் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். தொற்றின் முதல் அலையின் போது சுகாதாரத் துறைக்காக சுமார் ரூ. 15,000 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சேவைகள் குறைவாக உள்ள பகுதிகளில் மருத்துவ உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 50,000 கோடி, கடன் உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு மொத்தம் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டதற்கு மாறாக 15 மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடம் ஒன்றரை மடங்கும், முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் 80% ம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும், சரியான நடத்தை விதிமுறையை கடைப்பிடிக்கவும், மருத்துவர்கள் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். கடந்த நூற்றாண்டின் பெருந்தொற்று பற்றிய எந்த ஆவணமும் கைவசம் இல்லை, ஆனால் தற்போது நம்மிடையே தொழில்நுட்பம் இருக்கிறது, கோவிட் தொற்றை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை ஆவணப் படுத்தினால் மனித சமூகத்திற்கு அது பேருதவியாக இருக்கும் என்றும் கூறிய பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version