உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரை நிறுத்த, துருக்கியில் பேச்சுவார்த்தை நடக்க இருந்த நேரத்தில் உக்ரைன் திடீரென ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்கிற பெயரில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.இதற்கு எதிராக 400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் என ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியது.
24 மணி நேரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட வேண்டும் உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், குட்டையை குழப்பியது உக்ரைன்.அப்புறம் என்ன, ரஷ்யா தனது நேற்றிரவு உக்ரைன் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. “எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலுக்கு நாங்கள் கொடுத்த பதிலடி” என்று இந்த தாக்குதலை, ரஷ்ய பாதுகாப்பு துறை விவரித்திருக்கிறது. ஆனால், உக்ரைன் அதிபரோ, “இந்த போரில் இதுநாள் வரையில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தது இல்லை. இது ஒரு கொடூரம்” என்று அழுது புலம்பியுள்ளார்.
தாக்குதலில் 407 ட்ரோன்களையும், 45 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ரஷ்யா பயன்படுத்தியிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மற்ற பிற முக்கிய நகரங்களான செர்னிஹிவ், லுட்ஸ்க், டெர்னோபில், ல்விவ், சுமி, பொல்டாவா, க்மெல்னிட்ஸ்கி, மற்றும் செர்காஸி ஆகியவற்றில் இந்த ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. கீவ் நகரம் முழுமையாக சிதலமடைந்துள்ளது. உக்ரைன் அதிபர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மேலும் ஷ்யா இரண்டு வகையான ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது.1. ஷாஹேத் (Shahed) 2. டிகோய்கள் (Decoys)
இதில் முதல் வகையான ‘ஷாஹேத்’ ட்ரோன்கள் ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கம் திறன் கொண்டது. குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த ட்ரோன்கள் அதிக தூரம் பயணிக்கக்கூடியவையாகும். உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்பு, மற்றும் இராணுவ இலக்குகளை, இந்த ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்கியுள்ளது. இரண்டாவது வகையான ‘டிகோய்கள்’ ட்ரோன்கள், உக்ரைனின் வான் பாதுகாப்பு அம்சத்தை குழப்புவதற்காக அனுப்பப்பட்டவையாகும். இதில் ஆயுதங்களோ, வெடி பொருட்களோ இருக்காது. ஆனாலும், இதை பார்த்து உக்ரைன் வான் பாதுகாப்பு அம்சம் குழம்பிவிடும். இந்த கேப்பில், ‘ஷாஹேத்’ ட்ரோன்கள் தாக்குதலை நடத்தும்.
ஏவுகணைகளை பொறுத்தவரை, மொத்தம் 45 பயன்படுத்தப்பட்டது. இதில் பல ‘Kh-101’ க்ரூஸ் வகை ஏவுகணைகள் என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டு தயாரிப்பான இது, நீண்ட தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுகிறது. மொத்த ஏவுகணைகளில் 6 ஏவுகணைகள், ‘இஸ்கந்தர்-எம்’ பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாகும். கூடுதலாக ஒரு ஆன்டி-ரேடார் ஏவுகணையையும் ரஷ்யா பயன்படுத்தி உள்ளது.
நேட்டோவில், உக்ரைன் இணைய மேற்கொண்ட முயற்சிகள்தான் போருக்கு வித்திட்டது. ஆனால் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் நோக்கம் மாறியது. அதாவது, உக்ரைனின் நான்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும். பேச்சுவார்த்தை வரும்போது இந்த நான்கு மாநிலங்களையும் ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புதினின் நோக்கமாக இருந்தது.
டிரம்ப் பஞ்சாயத்து பேச தொடங்கியபோது கூட இதைத்தான் தெரிவித்திருந்தார். அதாவது, “ஆனது ஆகிபோச்சு! இனி உக்ரைன்-ரஷ்யா அன்னம் தண்ணீ பழக கூடாது. ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைனின் பகுதிகள் ரஷ்யாவுக்கே சொந்தம். இதெற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் போரை நிறுத்திவிடலாம்” என்று டிரம்ப் கூறியிருந்தார். பஞ்சாயத்து பேச கூப்பிட்டா, ரஷ்யாவுக்கு சப்போர்ட்டாக டிரம்ப் பேசுவதா? என உக்ரைன் ஆதங்கப்பட்டது. எனவே போரை நிறுத்தவில்லை. இன்னும் தீவிரமான தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, இப்போது இன்னொரு முடிவுக்கு வந்திருகிறது. அதாவது உக்ரைனை கடல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் புதிய முடிவு.அதன்படி ‘டினிப்ரோ’ நதிக்கு கிழக்கே உள்ள அனைத்து பகுதிகளையும் ரஷ்யா ஆக்கிரமிக்க முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் உக்ரைன் கருங்கடலிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை கொண்ட நாடாக மட்டுமே நீடிக்கும். ‘டினிப்ரோ’ உக்ரைனின் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது. போக்குவரத்து, விவசாயம் மற்றும் எரிசக்தி உற்பத்தி உள்ளிட்டவை இங்குதான் மேற்கொள்ளப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரியான ‘கர்னல் பாவ்லோ பாலிசா’ இது குறித்த கூறுகையில், “இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்குள், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் என்கிற உக்ரைனிய மாநிலங்களை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், வடக்கு உக்ரைன் பகுதி வரை ஆக்கிரமிப்பு செய்து, அங்கு தனது எல்லையை நிறுவ ரஷ்யா முயல்கிறது” என்று தெரிவித்திருந்தார்.இதே கருத்தை உக்ரைன் ராணுவமும் உறுதி செய்திருக்கிறது. 2026க்குள், உக்ரைனின் பாதி பகுதியை ரஷ்யா கைப்பற திட்டமிட்டிருக்கிறது என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
குறிப்பாக ஒடெசா மற்றும் மைக்கோலைவ் ஆகிய பகுதிகளை கைப்பற்றிவிட்டால், உக்ரைனை கடலிலிருந்து துண்டித்துவிடலாம். கடல் போக்குவரத்துக்கு இனி ரஷ்யாவை மட்டுமே அணுகும் வகையில் உக்ரைனை சுருக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உக்ரைனின் மொத்த பரப்பளவு தோராயமாக 603,500 சதுர கிலோமீட்டர்கள். இதில் 336,300 சதுர கிலோமீட்டர்களை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
முதலில் ராணுவ ரீதியிலான தாக்குதலும், பின்னர் பொருளாதார ரீதியான தாக்குதலுக்கும் ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. எனவே இந்த திட்டத்திலிருந்து உக்ரைனால் தப்பிக்கவே முடியாது என்றும் சொல்லப்படுகிறது.