ருத்ர தாண்டவம் திரைப்படத்தை வரவேற்காத, பாராட்டாத ஒவ்வொரு சினிமாகாரனும் தமிழ் சினிமாவின் துரோகிகளே..!

மோகன்ஜி இயக்கிய ருத்ர தாண்டவம், திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி தமிழர்கள் நெஞ்சங்களில் தாண்டவம் ஆடி வருகிறது.

பொதுவாக ரஜினி, அஜித், விஜய் போன்ற நட்சத்திர அந்தஸ்து உள்ள பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களுக்குதான் மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கும். இதுதான் தமிழ் திரைப்படத்தின் தலையெழுத்தாக, வரலாறாக இருந்து வந்துள்ளது.

இதனை மாற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளது ருத்ரதாண்டவம் திரைப்படம். இந்த திரைப்படம் திரைக்கு வந்த முதல் நாள், 2.7 கோடி ரூபாயை வசூலித்து இந்தியத் திரை துறையையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முதல் 3 நாள் வசூல் 7 கோடி ரூபாவை தாண்டிவிட்டது என்கிறார்கள். இதுவும் மிகப்பெரிய புதிய சரித்திரம்தான்.

பொதுவாக நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்களை, வினியோகஸ்தர்கள் வாங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறு முதலீட்டு படங்களின் முன்னோட்ட காட்சிகளை பார்ப்பதற்குக்கூட விநியோகஸ்தர்கள் விரும்புவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, அவுட்ரேட் முறையில் அனைத்து ஏரியாக்களிலும் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி உள்ளனர். இது தமிழ் சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று.

கொரோனாவின் முதல் அலை ஓரளவிற்கு முடிந்தபிறகு, திரையரங்குகளுக்கு புது உயிர் கொடுத்தது அப்போது பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். இது விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றாக தெரியும். பல மாதங்களாக இழுத்து மூடிய நிலையில் போராடிக்கொண்டிருந்த திரையரங்குகளுக்கு மீண்டும் ரசிகர்களை இழுத்து வந்தது அந்த திரைப்படம்.

அதன் பிறகு கொரோனாவின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் தமிழக திரையரங்குகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. இதன் மூலம் திரையரங்குகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்த நிலையில்தான் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருந்தாலும் ரசிகர்கள் திரையரங்குகள் பக்கம் வருவதைத் தவிர்த்தனர். எனவே தமிழகத்திலுள்ள ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளும் ரசிகர்கள் கூட்டம் இன்றி தவித்தன.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடித்த, எஸ் பி ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரைக்கு வந்தது. ஒரு சில நாட்களிலேயே அந்த படம் சுருண்டு விட்டது.

அதன் பின்னர் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் ஓடவில்லை. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த “கோடியில் ஒருவன்”, யோகிபாபு கதாநாயகனாக நடித்த “பேய் மாமா” மற்றும் “கடைசி விவசாயி” “சிவகுமாரின் சபதம்” போன்ற படங்கள் திரைக்கு வந்தும், பெரிய அளவில் ரசிகர்கள் திரையரங்குகள் பக்கம் தலை காட்டவில்லை.

இந்த நிலையில்தான் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ருத்ரதாண்டவம் திரைப்படம் திரைக்கு வந்தது. அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே அதன் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதன் காரணமாக மிகக் குறுகிய நாட்களிலேயே இந்த படம் அனைத்து ஏரியாக்களிலும் வியாபாரம் முடிந்தது. அதோடு அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என்பதையும் அறிவித்தார்கள்.

விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான 400க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் திருவிழா கோலமாக மாறியுள்ளன.

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய ஒரு பாதையை ருத்ரதாண்டவம் திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.

நட்சத்திர அந்தஸ்து உள்ள திரைப்படங்கள்தான் வியாபாரம் ஆகும் என்ற நிலையை தகர்த்து எறிந்து, நல்ல கருத்து உள்ள படங்களும் வியாபாரம் ஆகும் என்பதை ருத்ரதாண்டவம் திரைப்படம் நிரூபித்து உள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ருத்ரதாண்டவம் போன்ற கதையம்சம் கொண்ட படங்களுக்குத்தான், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பதை முழுமையாக புரிந்து கொண்டார்கள்.

இந்து மத நம்பிக்கைகளையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்துமத பாரம்பரியத்தையும் கேலி செய்தும், இழிவுபடுத்தியும் இதுவரை படம் எடுத்து வந்த தமிழ் திரை உலகம், இப்போது முதல்முறையாக அதற்கு நேர் எதிராக உண்மையை வெளியில் சொல்லும் திரைப்படம்தான் இனி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என்ற உண்மையை புரிந்து கொண்டுள்ளது.

இருந்தாலும் இந்த உண்மையை வெளியில் சொல்லி வெளிப்படையாக பாராட்டுவதற்கு திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை என்பது தமிழ் திரைப்பட உலகத்தில் சாபக்கேடு என்கின்றனர் திரையுலக விமர்சகர்கள்.

எது எப்படியோ தமிழ் சினிமாவிற்கு புத்துயிர் அளித்த ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பாராட்டாத, வரவேற்காத ஒவ்வொரு சினிமாகாரனும் தமிழ் சினிமாவின் துரோகிகளே.

Exit mobile version