நீர்நிலைகளின் மேல் பறக்கும் ‘சீ ப்ளேன்’விமான சேவை ! சென்னை டு கன்யாகுமரி! வெளிவந்த தகவல் !

தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மத்திய அரசு பாலங்கள் கட்டி வருகிறது, விரைவாகவும் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம் — புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங்கில், 35 கோடி ரூபாய் மதிப்பிலான, 1 கி.மீ. நீளமுள்ள மேம்பாலம், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

11 ஆயிரம் கோடி

இந்த புதிய பலத்தை மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.’காணொளி வாயிலாக திறக்கப்பட்டது இந்த மேம்பாலம் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: சென்னை -புதுச்சேரி இடையிலான சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த, 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 287 கி.மீ., தூரத்துக்கு, பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை – புதுச்சேரி — கன்னியாகுமரி இடையே, சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், ‘சீ ப்ளேன்’ எனப்படும், நீர்நிலைகளின் மேல் பறக்கும் விமான சேவையை விரைவில் துவக்க திட்டமிடப்பட்டு வருவதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக, 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியின் ராஜிவ் சதுக்கத்தில், 232 கோடி ரூபாய் செலவிலும், இந்திரா சதுக்கத்தில், 196 கோடி ரூபாய் செலவிலும், பிரமாண்ட மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது.

சீ ப்ளேன்

மேலும், சென்னை – புதுச்சேரி – காரைக்கால் – கன்னியாகுமரி வரையிலான கடல் மார்க்கத்தில், சீ ப்ளேன் எனப்படும், கடல் விமான சேவையை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வானில் பறக்கும் விமானங்களை போலவே, கடல், நதி, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் மேல், அதி வேகத்தில் செல்லவும், தரையிறங்கவும், தேவைப்படும் போது பறக்கவும் பயன்படுத்தப்படும் விமானங்கள், சீ ப்ளேன் என அழைக்கப்படுகின்றன. பிரமாண்ட படகு போலவும், இவற்றை பயன்படுத்தலாம்.

கடுமையான காட்டுத் தீ போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது, நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, தீ எரியும் பகுதியில் ஊற்றி, கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளுக்கு தான், கடல் விமானங்கள், முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தன.பின், இவற்றின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, பயணியர் சேவைகளுக்கும் இவற்றை, பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

குஜராத்தின், ஆமதாபாதில் அமைந்துள்ள, சபர்மதி ஆற்றில் இருந்து, பிரமாண்ட சர்தார் படேல் சிலை அமைந்துள்ள, கேவாடியா வரை, கடல் விமான போக்குவரத்து, இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.
இதற்காக, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலை ஆணையம் ஆகியவற்றுடன், குஜராத் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

பயண நேரம் குறையும்

தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாயிலாக, இந்த சேவை வழங்கப்பட உள்ளது. குஜராத்தில், ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்தினர், இந்த சேவையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை — புதுச்சேரி — கன்னியாகுமரி இடையே, இதுபோன்ற கடல் விமான போக்குவரத்து சேவை துவக்கப்பட்டால், விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும், ‘ஏர்போர்ட்’கள் அமைக்கப்படுவதைப் போல, ‘வாட்டர்போர்ட்’ எனப்படும், நீர்நிலை விமான நிலையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா வளர்ச்சி அடையும்; பயண நேரம் குறையும்.சாலை மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும்.

Exit mobile version