வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறையால் கைது, பைபாஸ் சர்ஜரி, 471 நாள் சிறைவாசம், மீண்டும் அமைச்சர் பதவி, ஜாமீனில் பிரச்னை, டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டுகள் எனத் திக்கித் திணறுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “நான்கு நாள்கள்தான் அவகாசம். அமைச்சர் பதவியா… சுதந்திரமா… இதில் எது வேண்டும் என அவரை முடிவுசெய்யச் சொல்லுங்கள்…” என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் கண்டிப்பான வார்த்தைகளால், ரொம்பவே ஆடித்தான் போயிருக்கிறார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருப்பது, அவருக்கான சிக்கலை மேலும் அதிகரித்திருக்கிறது.
ஜாமீன் பெற்ற சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் பாலாஜி இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள், ‘அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்’ எனச் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகுதான், அவருக்கு ஜாமீனே வழங்கப்பட்டது. ஜாமீனுக்கான நிபந்தனையாக, `சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; சாட்சிகளை சந்திக்கக் கூடாது; வாரத்துக்கு இரண்டு முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்’ எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்கியதை ரத்துசெய்யக் கோரி, வித்யா குமார் என்பவரும், அமலாக்கத்துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில்தான், குட்டுவைத்து கண்டிப்பு காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
நீதிபதி அபய் எஸ்.ஓகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த விசாரணையில், ‘நன்னடத்தை அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கவில்லை. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கிறார். அரசியலமைப்பின் 21-வது சட்டப் பிரிவு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை அவருக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதால்தான் ஜாமீன் வழங்கினோம். அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை முழுவதுமே, அவர் அமைச்சராக இல்லை, சாட்சிகள் மீது தாக்கம் செலுத்த மாட்டார் என்பதன் மேல்தான் நடந்தது. அதைப் புரிந்துகொள்ளாமல், உடனடியாக அமைச்சராகி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அமைச்சராக அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன உறுதி… சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பதற்கு அவரிடமிருக்கும் அதிகாரம் ஒரு முக்கியக் காரணம் என்கிறது அமலாக்கத்துறை. அது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயம்தான். உங்களுக்கு ஜாமீன் வழங்கி பெரிய தவறைச் செய்துவிட்டோம்…’ என நீதிபதி ஓகா கடுகடுக்க, நீதிமன்ற அறை முழுவதும் நிசப்தமானது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் எழுந்து, ‘சாட்சியங்கள் கலைக்கப்படுவார்கள் என்று நினைத்தால், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்…’ எனக் கோரிக்கை வைத்தார். கடுப்பான நீதிபதி ஓகா, ‘இந்த வழக்கில் ஆயிரக்கணக்கான சாட்சியங்கள் இருக்கிறார்கள். அவர்களால் வேறொரு மாநிலத்துக்குச் சாட்சி சொல்ல எப்படி வர முடியும்… இந்த நடத்தையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது…’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.
பாலாஜிக்காக ஆஜரான சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி சில விஷயங்களை எடுத்துச் சொல்லவும், ‘ஏற்கெனவே, வழக்கை வாபஸ் பெறுவதற்கு செட்டில்மென்ட் நடந்துவிட்டதாக, கீழமை நீதிமன்றத்தில் வாதாடியதெல்லாம் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாங்கள் வழங்கிய ஜாமீன் என்பது சாட்சியங்களைக் கலைக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ் கிடையாது…’ என டென்ஷனான நீதிபதி ஓகா, ‘அமைச்சர் பதவியா… ஜாமீனா… இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யுங்கள்’ என உத்தரவிட்டார். கபில் சிபல் தரப்பில் நான்கு நாள்கள் அவகாசம் கேட்கவும், ‘அவர்கள் இதோடு நான்காவது முறையாக அவகாசம் கேட்கிறார்கள். இறுதித் தீர்ப்புத் தேதியை அறிவித்துவிடுங்கள்’ என்றார் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. ‘அன்று வாதம் செய்யப்போவதில்லை, பதில் மனு மட்டுமே தாக்கல் செய்கிறோம்’ என கபில் சிபல் உத்தரவாதம் அளிக்கவும், வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது, ‘சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன’ (Change of Circumstances) என்று சொல்லி ஜாமீன் வழங்கப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளில் ஜாமீன் பெற்றவர்களுக்கு, இப்படியொரு வார்த்தையை இதற்கு முன்னர் நீதிமன்றம் பயன்படுத்தவில்லை. இப்போது, அந்தச் சூழல்களைத் தனக்குச் சாதகமாக பாலாஜி பயன்படுத்திக்கொண்டு, நீதிமன்றத்தோடு விளையாடுவதாகக் கருதுகிறது உச்ச நீதிமன்றம். உத்தரவு வெளியானவுடன், முகுல் ரோஹத்கி, கபில் சிபல் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார். டெல்லியிலுள்ள சில சீனியர் வழக்கறிஞர்கள், ‘தற்போதைய சூழலில் ராஜினாமா செய்வதுதான் சிறந்த வழி’ என்று அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
