ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடி புதிய சர்ச்சையை தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். அவர் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக இதை கூறியிருந்தார். இந்தநிலையில் மோகன் பகவத்தின் பேச்சுக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருப்பதாவது:- நான் மோகன் பகவத்தின் பேச்சை ஆதரிக்கிறேன். இந்த தினசரி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது அது நாட்டை பாதிக்கும். நாம் சிவலிங்கத்தை தேடுவதை விட்டு, காஷ்மீரிகளின் உயிர் பற்றி யோசிக்க வேண்டும். காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் உயிரை எப்படி காப்பாற்றுவது என்றும் யோசிக்க வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சினையை பா.ஜனதா தான் பூதாகரமாக்கியது. பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் காஷ்மீர் நிர்வாகமும் உங்களிடம் (பா.ஜனதா) தான் உள்ளது. ஆனால் தற்போதும் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுகின்றனர். தற்போது நிலவும் காஷ்மீர் பண்டிட்களின் நிலை குறித்து காஷ்மீர் பைல்ஸ்-2 படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















