சிவசேனா ஆட்சி காலி ! விரைவில் மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி.

மஹாராஷ்டிராவில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 46 பேருடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. ஆனால், முதல்வர் பதவியை கேட்டு சிவசேனா முரண்டு பிடித்ததால் கூட்டணி உடைந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, ‘மஹாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை சிவசேனா உருவாக்கியது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.ஆனால், அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே, பா.ஜ.,விடமிருந்து, அரசியல் ரீதியில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., கூடுதலாக வேட்பாளரை நிறுத்தி, சிவசேனாவை தோற்கடித்து, எம்.பி., சீட்டை கைப்பற்றி அதிர்ச்சி தந்தது.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலிலும், போட்டியிட்ட நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிக்கு சாத்தியம் என்ற நிலையில், 5 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி, ஐந்திலும் வெற்றி பெற்று பா.ஜ., ஆச்சரியத்தை அளித்தது. ‘கிராஸ் ஓட்டிங்’ எனப்படும் அணிமாறி ஓட்டுப் போட்டதால் மட்டுமே இது சாத்தியம் என்பதால், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மீது, சந்தேக கண் விழுந்தது. நிலைமை இப்படியிருக்க, சிவசேனா சட்டசபை கட்சித் தலைவர் ஏக்னாத் ஷிண்டே திடீரென தலைமறைவானார். அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேருடன், குஜராத்தின் சூரத்தில் உள்ள சொகுசு ஓட்டலில், தங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, மஹாராஷ்டிர அரசியல் களம் சூடாகியுள்ளது.

பின்னர் குஜராத்தில் இருந்து தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்திக்கு இவர்கள் சென்றுள்ளனர். கவுகாத்தி விமான நிலையத்தில் ஏக்னாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‛மொத்தம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இங்கு உள்ளனர். பால் தாக்கரேவின் ஹிந்துத்துவாவை நாங்கள் எடுத்துச் செல்வோம்’ என்றார். முன்னதாக சூரத்தில் ஷிண்டே கூறுகையில், ‛நாங்கள் பால் தாக்கரேவின் சிவசேனாவை விட்டு வெளியேறவில்லை. அவரது ஹிந்துத்துவாவை பின்பற்றி வருகிறோம், மேலும் அதை முன்னெடுப்போம்’ என்றார்.

கவுகாத்தி விமான நிலையம் வந்த சிவசேனா எம்எல்ஏ.,க்களை பா.ஜ., எம்எல்ஏ போர்கோஹைன் மற்றும் பா.ஜ., எம்.பி பல்லப் லோச்சன் தான் ஆகியோர் வரவேற்றதால் அவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தெரிகிறது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர அரசு விரைவில் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழலால் சட்டசபை கலைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தற்போது ஏக்னாத் ஷிண்டே உள்பட 46 சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர்.

Exit mobile version