சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை மூலம் மாநகரின் ஒரு பகுதிக்கும், 7 பேரூராட்சிகள், 28 வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த அணையில், தற்போது 45 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. தேவை கருதி 45 அடிக்கும் மேல் தண்ணீர் தேக்க வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம், தமிழக பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் எத்தனை முறை கோரிக்கை விடுத்தாலும், கடிதம் எழுதினாலும் கேரள அரசு அதனைக் கண்டுகொள்வதில்லை.
அணைக்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளைக் கண்டித்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவு பெறும் நிலையில், சிறுவாணி விவகாரத்தில் திமுக அரசு எவ்வித அக்கறையும், கவனமும் செலுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் பேசி, சிறுவாணி அணையின் முழு கொள்ளளவும் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.