ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்தியா வர விருப்பம்.
- அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் என்று சற்றேறக்குறைய அனைத்து முன்னேறிய நாடுகளும் சீனாவை இனி நம்பி தொழில் செய்ய முடியாது என்ற நிலைக்கு
வந்துவிட்டதாக தெரிகிறது.
சீனாவில் இருக்கும் தங்களது தொழிற்சாலையை இந்தியாவிற்கு மாற்றிவிட வேண்டும் என்ற நிலையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எடுத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் இந்தியாவே மாற்று உற்பத்தி கேந்திரம் என்று மனதில் நிறுத்தி, இந்திய அரசின் பல வேறு துறைகளுடன் குறிப்பாக, மத்திய, மாநில அரசின் துறைகளுடன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையை துவங்கி விட்டன.
இவற்றில் 300 நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக மொபைல், மின்னணு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை மாற்று உற்பத்தி கேந்திரமாக அமைக்க மத்திய அரசு அனைத்து விதத்திலும் முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு புதிய உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரிகளை 17% ஆக குறைத்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக குறைந்த உற்பத்தி வரி ஆகும். மேலும் (GST) சரக்கு மற்றும் சேவை வரிகளிலும் பல சலுகைகளை இந்தியா வழங்கி உள்ளது. இதன் காரணமாக உற்பத்தி துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுநாள்வரை சீனாவை தங்களின் உற்பத்தி கேந்திரமாக அமைத்திருந்த ஜப்பான், அமெரிக்க மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் இந்தியாவை எங்களின் உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்கின்றன.
“Don’t put all eggs in one basket” என்ற பழமொழியை மீறி உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவியிருந்தன. வைரசால் சீனா பாதிக்கப்பட்டதால், இந்த முன்னணி நிறுவனங்களின் சப்ளை செயின் (விநியோகச் சங்கிலி) முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
லாபத்தை விட நஷ்டங்கள் நல்ல பாடத்தைக் கற்றுத் தருகின்றன. பல தொழிற்சாலைகள் சீனாவிலிருந்து இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மலேஷியா போன்ற நாடுகளுக்கு இடம் மாறுகின்றன என்கிறார் குருபிரசாத் மகாபாத்ரா (Secretary in the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT).)
உலகின் தொழிற்சாலையாக இந்தியா வருவதற்கான சூழல் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தையாகவும் உள்ளது.
வியட்நாம் நாட்டில் ஒரு மொபைல் உற்பத்தி ஆலையை துவங்கினால் அதன் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த வெளிநாடுகளை நம்பி, ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவில் உற்பத்தி சந்தையும் வியாபார சந்தையும் ஒரு சேர அமைந்து உள்ளது. அதனால் உலகின் பல நாடுகளால் இந்தியா ஈர்க்க பட்டு வருகிறது என்கிறார் மகாபாத்ரா.
கட்டுரை :- வலதுசாரி எழுத்தாளர்கள் பத்மநாபன் நாகராஜன் மற்றும் மகேந்திர சாவந்த்.